எங்களைப் பற்றி

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் வருகிற லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது தில்லி மாநகரம்.

அதிகார மையமாக இருப்பதால் அரசியல்வாதிகள், வர்த்தக பெருவர்த்தக மன்னர்களின் செயல்களமாக விளlங்குகிறது. வாழ்க்கையை தேடியும் வாழ்வில் இன்னும் பல வளங்களைத் தேடியும் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வருவோரை வரவேற்கிற நகரமாகவும் இருக்கிறது. புலம் பெயர்ந்து வருபவர்களில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிகுதி என்றாலும் தென்பகுதியிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் குறைவில்லை. ஒருமுறை தில்லிக்கு வந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பிறகு, புலம் பெயர்ந்த மக்கள் மனங்களில் பண்பாட்டு அடையாளம், சமூக கலந்துறவுக்கான ஆர்வம் எழுகிறது.

தில்லித் தமிழ்ச் சங்கம், தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் , தில்லி மலையாளிகள் சங்கம் போன்ற அமைப்புகள் இப்படி பிறந்தவைதான். இவற்றில் அனைத்திலும் மூத்த அமைப்பான தமிழ்க் கல்வி கழகம் தலைநகரில் ஏழு பள்ளிகளை நடத்தி வருகிறது. தில்லித் தமிழ்ச் சங்கத்தை 1946 ஆம் ஆண்டில் நிறுவியவர்கள் – நவரத்தினங்கள் என்றும், சங்கம் நிறுவிய துங்கர்கள் என்றும் போற்றப் படுகிற ஒன்பது தமிழர்கள். இவர்களில் ஒருவரான தமிழ்ச் சங்கம் பாலு அவர்கள் தங்கியிருந்த ஒரு அறையின் மூலையில் நூலக வடிவில் துவக்கபட்டது தில்லித் தமிழ்ச் சங்கம்.

தமிழார்வலர்கள் ஆர்வமும் ஈடுபாடும் காட்ட, சங்கம் தளர்நடை போடத் துவங்கியது. தில்லிக்கு வரும் தமிழ்ப் பெரியோரின் ஆலோசனைகளும் வழிகாட்டலும் கிடைக்க, அவர்தம் விரல்பிடித்து நடக்கத் துவங்கியது. மூதறிஞர் ராஜாஜி மற்றும் இன்னபிற தமிழர்களின் ஆதரவால் சங்கத்துக்கு ஒரு கட்டிடம் அரசிடமிருந்து வாடகைக்கு கிடைத்தது. இன்றைய கனாட் பிளேஸ் பகுதியில் பாலிகா பஜார் வாயில் இருக்கும் இடத்தில், இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் மூன்று அறைகள் சங்கத்துக்கு கிடைத்தன. தமிழகத்திலிருந்து வரும் அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும், வர்த்தக உலகினரும் சங்கத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். நிகழ்ச்சிகள் விரிவாகத் துவங்கின. இடப்பற்றாக்குறை எழுந்தது. கட்டிடமும் இடிக்கப்பட இருந்தது. அந்நிலையில், பெரியோர்களின் ஆதரவாலும், தமிழார்வலர்களின் நன்கொடையாலும் இராமகிருஷ்ணாபுரத்தில் ஒரு காலி மனையை வாங்கியது சங்கம்.

இன்று அங்கே பிரம்மாண்ட கட்டிடமாக வளர்ந்து காட்சியளிக்கிறது சங்கக் கட்டிடம். படிப்படியாக பல்வேறு நிலைகளில் கட்டப்பட்ட சங்கத்தில் திருவள்ளுவர் கலையரங்கம் இருக்கிறது. தீரர் சத்தியமூர்த்தி நூலகம் உள்ளது. பாரதி அரங்கம், பாரதிதாசன் அரங்கம் என இரண்டு சிறு அரங்கங்கள் உள்ளன. பல்வேறு நிகழ்ச்சிக்கும் வசதியான ஒரு வரவேற்புக்கூடம் இருக்கிறது. சங்கம் பல மேடுபள்ளங்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் அதன் அடிப்படை நோக்கம் மாறாமல் இருக்கிறது. கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் வாரம்தோறும் ஆண்டு முழுவதும் நிகழ்ந்து வருகின்றன. பாட்டும் பரதமும் பயிற்றுவிக்கப்படுகின்றன. வயலின், மிருதங்கம், குச்சுபுடி, ஓவியம் கற்றுதரப்படுகின்றன. பலநூறு மாணவர்கள் இவற்றில் பயின்று வருகிறார்கள். 1971-ல் வெள்ளி விழாவும், 1996-ல் பொன்விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

சங்கத்தில் ஆண்டுதோறும் பாரதி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

தமிழ்ப் பெரியோர்கள் மற்றும் கொடையாளிகளின் பெயரால் ஏராளமான அறக்கட்டளைகள் நிறுவப்பட்டுள்ளன . மூதறிஞர் ராஜாஜி முதல் டாக்டர் அப்துல்கலாம் வரை, நேரு முதல் வாஜ்பாயி வரை, கலைஞர் கருணாநிதி முதல் பாடலாசிரியர் வைரமுத்து வரை என தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களின் பட்டியல் நீளுகிறது. தமிழ்ச் சங்க செயல்பாடுகளையும் தமிழ் வளர்ப்பு முயற்சிகளையும் உலகளாவிய தமிழர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இந்த வலைதளத்தின் நோக்கம். உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கொண்டு இன்னும் பல சிகரங்களைத் தொட முடியும். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய இயலும் என்ற நம்பிக்கையோடு உங்களை தில்லித் தமிழ்ச் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது.

– நிர்வாகக் குழு