குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

தில்லித் தமிழ்ச்சங்கத்தில் குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் திருவீ.ரெங்கநாதன், ஐ.பி.எஸ்,ஓய்வு அவர்கள் தலைமையில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் தலைவர் திருவீ.ரெங்கநாதன், ஐ.பி.எஸ்,ஓய்வு அவர்கள் தலைமையுரை ஆற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பி.குருமூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.நேரலையில் மதுரை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் கலாமைப் பற்றி சிறப்புரையாற்றினார். அதில் அவர் கலாமைப் பற்றி கூறுகையில் 11 வது ஜனாதிபதியாக இருந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்.மாணவர்களிடையே மிகுந்த அன்பு கொண்டவர்.பழகுவதற்கு எளிமையானவர்.அவர் படித்த சுவார்ட்ஸ் பள்ளி சேதுபதி மன்னர்களால் பரம்பரையால் உருவாக்கப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான பள்ளியில் படித்தவர். அவர் ஆசிரியரிடம் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என சிறு வயதிலேயே வினவியவர்.அவர் விமான ஓட்டியாக வரவேண்டும் என்பதே சிறு வயதுக் கனவாக இருந்தது. ஆனால்  அதில் தேர்ச்சி பெறவில்லையெனினும், பிற்காலத்தில் முப்படைத் தளபதிகளும்  சலாம் செய்கின்ற அளவுக்கு வளர்ந்தார்.எழுத்தாளர் சுஜாதா அவர்களும் திரு கலாம் அவர்களும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியாது. ஆனால்  விண்ணில் ஏவுகணை ஏவி தன்னுடைய கல்வி,அறிவு,அனுபவம் அனைத்தும் தான் பிறந்த நாட்டிற்கே பயனுறும் வகையில் வாழ்ந்து காட்டியவர். அவர் மாணவர்களின் சொத்தாக போற்றப்படுபவர்.கனவு காணுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியவர். இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.  

இணைச்செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் தனது கவிதை மூலம் திரு கலாமிற்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்திய திபெத்திய எல்லை காவல்துறை ஆய்வாளர் திருமதி சித்ரா பாடலுடன் கூடிய சிற்றுரையில் கலாமின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியை இணைச்செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன் அவர்கள் ஒருங்கிணைத்தார். இணைப்பொருளாளர் திரு இராஜ்குமார் பாலா அவர்கள் தனது தனித்துவமான உரையால் நிகழ்ச்சியை தொகுத்ததுடன்  நன்றியுரையும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பொருளாளர் திரு பிரகாஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு வெங்கடேசன் மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு அருணாசலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்கள்.