தன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்!

தில்லித் தமிழ்ச் சங்கம்

கன்னிக் காவிரியும் கரைபுரள் கங்கையும்

கம்பன் வால்மீகி போல்காவியத்தில் சங்கமிக்க

கட்டியம் கூறவோர் கற்றோர் சங்கம்-கடமையே

கண்ணெனும் கனிவான தில்லித் தமிழ்ச் சங்கம்!

தலைநகர் தமிழருக்கோர் பல்சுவை சங்கம்

தடம் தேடுவோருக்கோர் கலங்கரை விளக்கம்-கவின்

கலை கற்போருக்கோர் நற்கலைக்கூடம்-வற்றா

கற்பனையூற்றுக்கோர் கொள்ளிடம் தில்லித் தமிழ்ச் சங்கம்!

இயல் இசை நாடகம் மூன்றும் -என்றும்

இசைந்து குலவும் இன்புறு சங்கம்!

சிந்தைக்கும் செவிக்கும் திகட்டா விருந்தோம்பி

நாவிற்கும் அறுசுவை உணவளிக்கும் தில்லித் தமிழ்ச் சங்கம்!

திரையொளித் தாரகைகள் -கல்விக்

கரை கண்ட கனவான்கள் -நல்

உரை சொல் புலவர்கள் என்பார்க்கு -மன

நிறை மகுடம் சூட்டும் தில்லித் தமிழ்ச் சங்கம்!

திறமைக்கு மெருகேற்றி -மெய்யான

தரத்திற்கு தளமீன்று-தகுந்தோர்க்கு

தரணி ஆள முகவரி நல்கும் சங்கம்

தன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்!

இளம் கலைஞருக்கு ஏணியாய் நின்று

வளர் கலைஞருக்கு தோணியாய் சென்று

பழம் கலைஞர் தமை பணிவாய் ஆதரிக்கும்

பார் புகழ் சங்கம் தில்லித் தமிழ்ச் சங்கம்!

தலைநகர் ஏகும் சாதனை தமிழர்தமை

தலை வணங்கி தாய் போல் தழுவி

மனம் பூரிக்க பாராட்டி மகிழும்

மாண்புடை சங்கம் தில்லித் தமிழ்ச் சங்கம்!

பண்பட பயன்பெற பல்துறை நூல்கள்

பாங்காய் குடிகொண்ட நிறை நூலகத்தினூடே

பறை தவிர் பகுத்தறிதவை என்றும் வளர் சங்கம்

பாவலர் போற்றும் பன்முக தில்லித் தமிழ்ச் சங்கம்!

ஆய கலைகள் ஆனந்த நடனமிட

அரங்கும் ஆதரவும் தந்து- அறநெறியொழுகி

அன்புடன்அரவணைத்து செல்லும் சங்கம்-என்றும்

ஆர்வமுடன் சேவை நல்கும் தில்லித் தமிழ்ச் சங்கம்!

வள்ளுவன், பாரதி புகழ் பாடும் போட்டிகள்

கவிதைக்குமோர் போட்டி பேச்சுக்குமோர் போட்டியென

செந்தமிழ் செழித்தோங்க ஆண்டுப் போட்டிகள்தமை

செம்மையாய் தளமேற்றும் சங்கம் தில்லித் தமிழ்ச் சங்கம்!

தலைமுறைகள் இதமாய் சங்கமிக்க

வரைமுறைகள் வகுத்த நவின் சங்கம்-நவரச

கலைகள் பைய அரங்கேற்றும் கன்னித்தமிழ் சங்கம்

கலைமகள் என்றும் நிலை கொண்ட தில்லித் தமிழ்ச் சங்கம்!

வாழிய செந்தமிழ்!வளர்க செந்தமிழ் நாடு!

வாழிய பாரதம் !வாழிய இவ்வையகம் !

அன்பன்

தி.சுவாமிநாதன்