பாரதி என்ற மகா சிந்தனையாளன் – சிறப்புரை – 11.12.2021

11.12.2021 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாரதி பிறந்த நாளன்று தலைவர் திரு வீ.ரெங்கநாதன் அவர்கள் தலைமையில் ‘பாரதி என்ற மகா சிந்தனையாளன்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக துணைத் தலைவர் பி.குருமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

கவியோகி நாகசுந்தரம் அவர்கள் எழுதிய ‘கவியோகியின் கவிதைகள்’ என்ற நூல் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தமிழச் சங்க தலைவர் வீ.ரங்கநாதன் அவர்கள் வெளியிட. அதன் முதல் பிரதியை சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் தி.கு.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய வெங்கடேஸ்வரா கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் திரு ச.சீனிவாசன் தனது உரையில் கவிதைகளில் மரபுக்கவிதை, நவீனக் கவிதை, வசன கவிதை, ஹைக்கூ எனப் பலவகை உண்டு. அவ்வகையில் ‘கவியோகியின் கவிதைகள்’ நூல் ஒரு பல்சுவைத் தொகுப்பு எனலாம். கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய மிகச் சிறந்த தொகுப்பு. இவரைப்போலவே தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் தமது கவித்திறமையை நூலாக வெளியிட முயல வேண்டும் என்றார்.

சங்கத்தி்ன் இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் மீண்டும் பிறந்து வா பாரதி என்ற தலைப்பில் பாரதிக்கு கவிதாஞ்சலி செலுத்தினார்.

தில்லிப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் தி.கு.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் ‘பாரதி என்ற மகா சிந்தனையாளன்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.பாரதியை நாம் அனைவரும் கவிஞன் மற்றும் தேசியவாதியாகவே உருவகப் படுத்திப் பார்க்கிறோம்.நான் வரலாற்று பேராசிரியராக இலக்கிய நோக்கில் அவரை ஒரு இயக்கமாகக் கருதுகிறேன், அவருடைய புதிய ஆத்திசூடியில் அவர் பல்வேறு கருத்துக்களை அன்றைய காலகட்டத்திலேயே மக்களிடையே விதைக்க முற்பட்டவர். மேலை நாகரிகத்திலிருந்து விடுபட்டு இந்திய நாட்டின் சிந்தனையால் கவரப்பெற்றவர். நமது நாகரிகம் ஆன்மீகம் மற்றும் தேசியம் கலந்தது. பாரத மாதா, சக்தி, கண்ணன், பாரத நாடு மற்றும் தேச விடுதலை பற்றி அதிகம் எழுதினார். அவர் மக்களிடையே அறியாமை என்ற இருள் நீங்கி புதுஅறிவு அல்லது புதிய சிந்தனை பெற்றுத் திகழவேண்டும். பழமையைத் தெரிந்து கொள், நிகழ்காலம் உணர்ந்து செயல்படு, எதிர்காலத்தை உருவாக்கு. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். விவசாயம் பழகு, பொறியியல் அறிந்து கொள். கடந்த காலத்தின் பலம் அறிந்து நிகழ்காலத்தை சாதகமாக்கிக் கொண்டு எதிர்காலத்தை தைரியமாக சந்தித்தவன், பாரதி பாடல்களில் வாழ்கிறான். சாதி வேற்றுமை, பெண்ணடிமையை சாடி பாடியது, குழந்தைத் திருமணத்தை கண்டித்தது, கல்விபணியில் பெண்களுக்கு முன்னுரிமை, தகப்பனார் சொத்தில் பங்கு, ஆடவருடன் பேசுவதற்கு அனுமதித்தல் என பலதரப்பட்ட கருத்துக்களை பாடல்களாக தனது உணர்ச்சிபூர்வமான சிந்தனையினால் வெளிப்படுத்தியவர். அவர் சிந்தையில் உதித்த பாரதம் இன்று கனவாகிக் கொண்டிருக்கிறது. பாரதியை குருவிக்கரம்பை ஷண்முகம் அவர்கள் தனது பாடலில் பாரதியை ‘மாய்ந்தாலும் மாயாதவன்’ என்பது போல் பாரதியார் ஒரு மாபெரும் சி்ந்தனையாளராக என்றும் நம்மிடையே வாழ்வார் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

சங்க இணை பொருளாளர் கவிஞர் திரு
இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் பாரதி பாடல்களை மேற்கோளிட்டு இணைப்புரை மற்றும் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் சங்க இணைச் செயலாளர் திரு ஆ.வெங்கடேசன்,பொருளாளர் திரு பிரகாஷ்,செயற்குழு உறுப்பினர்கள்கே,எஸ்,முரளி, திரு கே.வி.முனியப்பன், திருமதி ஜோதி ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு விருந்தினர்களைக் கௌரவித்தனர்.