பாவேந்தர் பிறந்த நாள் விழா & மே தின விழா

02.05.2026 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136வது பிறந்த நாள் விழா மற்றும் மே தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கமாக புரட்சிக் கவிஞரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சிந்துக்கவி திரு மா. சேதுராமலிங்கம் அவர்கள் ”புவியை நடத்து! பொதுவில் நடத்து!” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

விழாவிற்கு தலைமை ஏற்ற சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி. சிவபாலமுருகன் அவர்கள் தனது உரையில் பாரதியையும், பாரதிதாசனையும் ஒப்பிட்டுப் பேசினார். தமிழ், தமிழர், தமிழ்நாடு என புரட்சிக் கவிஞர் தனது கவிதைகள் அனைத்திலும் தமிழ் உணர்வை ஊட்டியதாகக் கூறினார்.

சிறப்புப் பேச்சாளர் சிந்துக்கவி திரு மா. சேதுராமலிங்கம் அவர்கள் தனது உரையில் உழைப்பாளர்களின் உழைப்பே சிறந்த மூலதனம் என்றும் உழைப்பின் மகத்துவம் பற்றிய பாரதிதாசன் கவிதைகளை மேற்கொள்காட்டி பேசினார். ஷேக்ஸ்பியரைக் கொண்டாடுபவர்கள் பாரதிதாசனைக் கொண்டாட மறுப்பது ஏன் என்பது வியப்பளிக்கிறது என்றார். இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பாரதிதாசன். முற்போக்குச் சிந்தனைகளையும், பொதுவுடைமைக் கருத்துக்களையும் தனது கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தியதை எடுத்துரைத்தார். கவிதைகள் தவிர பல நாடகம், திரைப்படங்களுக்கு பாரதிதாசன் கதை, வசனம் எழுதியதையும் குறிப்பிட்டார். தமிழ் பக்தி இலக்கியங்களுக்கு எதிராக பாரதிதாசன் என்றைக்கும் பேசவில்லை என்று தெளிவுபடுத்தினார். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுத்த ஒப்பற்ற கவிஞன் பாரதிதாசன் என்று புகழாரம் சூட்டினார். கம்பன் பாடிய “மையோ மரகதமோ” என்ற பாடலில் வரும் ஐய்யோ என்ற சொல்லைப் போன்று பாரதியும், பாரதிதாசனும் கூட “அடடா” என்றும் “அடடே” என்றும் சொல்லாடல்களை தங்கள் கவிதைகளில் பயன்படுத்திய இடங்களில் சுட்டிக்காட்டினார். பாவேந்தர் நமக்கு அளித்திருப்பது தமிழ் இலக்கியம் மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவான வாழ்வு இலக்கியம் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார். பின்னர் சங்கப் பொருளாளர் திரு பாலமூர்த்தி தனது கருத்துரையில் பாரதி அரங்கத்தில் பாரதிதாசனுக்கு விழா நடத்துவது சாலப் பொருத்தம் என்று சொன்னார். முன்னதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு பி. இராமமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இணைச் செயலாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் இறுதியில் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு செல்வராஜ் மகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி என். சாமுண்டீஸ்வரி, திரு வே. இளஞ்சோழன், திரு எம்.ஆர். ராஜேந்திரன், திரு கே. சுந்தர், காத்திருப்பு உறுப்பினர்கள் திரு எம். எழிலரசு, திரு எஸ்.எம். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.