பாராட்டு விழா – 10.03.2025

10.03.2025 திங்கட்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திரு எஸ். ராஜேந்திரன் மற்றும் திரு எஸ். துரை ஆகியோர் நிறுவிய வ.உ.சி. நினைவு அறக்கட்டளையின் சார்பில் ”திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி. யும் 1908” என்று நூலுக்கு சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

சங்கத்தின் மூத்த உறுப்பினர் சிந்துகவி மா. சேதுராமலிங்கம் அவர்கள் தலைமை வகித்தார்.

தில்லி மூத்த வரலாற்றறிஞர் பேரா. மாதவன் கே பாலாட் அவர்கள் பாராட்டுரையாற்றினார். தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகம் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், ஜேஎன்யு முனைவர் பட்ட ஆய்வாளர் த.க. தமிழ்பாரதன் ஆய்வுரை வழங்கினார்.

பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்கள் தனது ஏற்புரையில், தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு இலக்கிய வரலாற்றில் தனி இடம் எப்போதும் உண்டு. தில்லித் தமிழ்ச் சங்கத்தினரால் பிரசுரிக்கப்பட்ட “Kambaramayanam-A Study” என்ற நூலை எழுதிய எழுத்தாளர் திரு வன்மீகநாதன் அவர்களை சந்தித்திருக்கிறேன். தில்லித் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட வ.உ.சி மலரையும் நினைவு கூர்ந்து பேசினார். தமிழ்ச் சமூகம் திருநெல்வேலியில் நடந்த எழுச்சியை மறந்துவிட்டது. மறந்து போன கதையை தரவுகளுடன் நான் மீட்டெடுத்திருக்கிறேன். நமது மறந்து போன வரலாற்றை,அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டி இந்நூலை எழுதியிருக்கிறேன். நூலுக்கு விருது வழங்கிய சாகித்திய அகாதெமிக்கும், பாராட்டு விழா செய்த தில்லித் தமிழ்ச் சங்கத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு, உரையை நிறைவு செய்தார்.

விருதாளரையும், விருந்தினர்களையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா.முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி அமுதா பாலமூர்த்தி, திரு ஜெ. சுந்தரேசன், சி. கோவிந்தராஜன் மற்றும் திரு பி. அமிர்தலிங்கம் ஆகியோர் கெளரவித்தனர்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு பி. ரங்கநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினர்.

செயற்குழு உறுப்பினர் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.