24.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தொலைக்காட்சிப் புகழ், பேராசிரியர் திரு எம். இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் “நம் வாழ்க்கை நம் கையிலா? பிறர் கையிலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. திரு ஜெ. சுந்தரேசன், திரு பி. அமிர்தலிங்கம், திருமதி மாலதி தமிழ்ச்செல்வன் ஆகியோர் நம் கையிலே என்ற தலைப்பிலும், திரு தி. பெரியசாமி, திருமதி உமா சத்தியமூர்த்தி, டாக்டர் எம். சுந்தர்ராஜன் ஆகியோர் பிறர் கையிலே என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
பேராசிரியர் திரு எம். இராமச்சந்திரன் இரு தரப்பிலும் வைக்கப்பெற்ற வாதங்களைக் கருத்தில் கொண்டு, மனிதன் என்பவன் ஓர் சமூக விலங்கு என்றே சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தன் வாழ்க்கையை பிறர் கையில் ஒப்படைக்கும் பொழுது, அவர்களால் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறான். வாழ்க்கையில் ஒருவன் உயர அல்லது அவனுள் இருக்கும் திறமையை வெளிப்படுத்த மற்றவரால் அளிக்கப்படும் வாய்ப்புகள், ஊக்கங்கள், பயிற்சிகள் எனப் பல அங்கங்கள் பற்பல சூழ்நிலைகளில் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
அதே, தன் வாழ்க்கை தன் கையில் என சுயமாக சிந்தித்து வாழ்பவனுக்கு மற்றவர்களின் கருத்தைப் பற்றிய கவலை இல்லை. ஒரு பள்ளியில் ஆசிரியர் என்பவர் மாணவனுக்கு பாடங்களைக் கற்பிக்க மட்டுமே செய்வார். ஆனால், மாணவனின் முயற்சியும், தன்னம்பிக்கையுமே அவனின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகிறது. அதைப்போல், ஓர் பேச்சாளரை எடுத்துக் கொண்டால் அவர் தன் சுய கருத்துக்களை முன் மொழிய ஓர் மேடை மற்றும் வாய்ப்பு தேவைப்படுகிறது. கேட்போரின் கருத்து முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, சமூகத்தில் பிறரைச் சார்ந்தே வாழவேண்டியுள்ளது.
எனவே, எவனொருவன் சமூகத்தில் பிறரின் உதவியோடு, தன் கையான தன்னம்பிக்கையுடன் தன் வாழ்க்கை தன் கையில் என்பதை ஆழ உணர்ந்து, சுயமாக சிந்தித்து, ஆராய்ந்து தன் வாழ்க்கையை வாழ்கிறானோ அவனே வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாளன் ஆகிறான் எனத் தீர்ப்பளித்தார்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி உஷா வெங்கட், திருமதி அமுதா பாலமூர்த்தி, திரு சி. தங்கவேல் ஆகியோர் பேச்சாளர்களை கெளரவித்தார்கள்.
சங்கப் பொருளாளர் திரு அருணாச்சலம் அவர்கள் நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றினார்.