பாராட்டு விழா – 22.04.2025

22.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் சுனைனா தொண்டு நிறுவனமும் இணைந்து தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் மற்றும் மூத்த மிருதங்க வித்வான் திரு டி.கே. வெங்கடசுப்பிரமணியன் அவர்களின் 60 வருட இசை சேவைக்கு பாராட்டு விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா.முகுந்தன் அவர்கள் வரவேற்று பேசுகையில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் மட்டுமல்லாமல் பல பெரிய இசைக் கலைஞர்களை தில்லிக்கு அழைத்து வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். இவருடைய குரு திரு ஜெயராமன் 90வது பிறந்த நாளை மிக விமரிசையாக தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து இசை உலக ஜாம்பவான் டிரம்ஸ் சிவமணி அவர்களை வைத்து ஒரு அருமையான விழா நடத்தினார் என்பதை நினைவு படுத்தினார்.

தில்லிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் மற்றும் மிருதங்க வித்வான் திரு கு.வெங்கடசுப்பிரமணியன் பேசுகையில், நான் 36 வருடங்களாகப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளேன். நான் 2012 ஆம் ஆண்டு, பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியுடன், மேற்படிப்பைத் தொடங்கினேன். பொதுவாக, தமிழ்நாட்டிலிருந்து, தில்லிக்கு பலபேர் பணி காரணமாகவே வருவர். அப்படி பணியாற்ற வருகையில் நாம் தமிழ்க் கலாச்சாரத்தையும், நம்முடன் சேர்த்துக் கொண்டு வருவது வழக்கம். எனது குடும்பம் இசைக்குடும்பமாகும். எனது குரு, இசை ஜாம்பவான் எனப் புகழ்பெற்ற பத்மபூஷன் டி.கே.மூர்த்தி ஆவார். தற்போது 102 வயதிலும் இசையின் பல்வேறு நுணுக்கங்களை மாணவர்களுக்கு இன்றும் பயிற்றுவித்து வருகிறார். அவரது 90 ஆம் ஆண்டு விழாவில் மட்டுமல்லாது, அண்மையில், நடைபெற்ற அவரது 100 ஆம் ஆண்டு விழாவிலும் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன். நான் கீதையைப் பின்பற்றுபவன். அதாவது “கடமையை செய்! பலனை எதிர்பாராதே!” நாம் எப்பொழுதும் சமூகத்தை பாதுகாக்கவேண்டும். சமூகத்தை பாதுகாக்கும்போது, நமது குடும்பமும் அடுத்த நிலைக்கு உயரும் என்று வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், சுனைனா தொண்டு நிறுவனத்தின் தலைவர் திருமதி கனகா சுதாகர் ஆகியோர் திரு டி.கே. வெங்கடசுப்பிரமணியன் அவர்களை கெளரவித்தார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன், திரு சி. கோவிந்தராஜன், திருமதி உஷா வெங்கடேசன் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திரு எம். ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன் அவர்கள் அருமையாக தொகுத்து வழங்கினார்.