தில்லித் தமிழ்ச் சங்க ’பவள விழா’ மலர் வெளியிடப்பட்டது
புதுதில்லி, 20.8.2022: தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ’பவளவிழா மலர்’ வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் தலைமை தாங்கினார்.
முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை பொதுச் செயலர் திரு என். கண்ணன் வரவேற்றுப் பேசினார். பவள விழா கண்ட சங்கத்தின் பணிகளையும், சங்கக் கட்டிடம் கலையரங்கம், பயிலரங்கம், நூலகம், உருவாகவும், அதன் நிதி நிலைமையை மேம்படுத்தவும், சுயநலம் பாராது உழைத்த தலைவர்கள் மற்றும் பொதுச்செயலர்களின் பணிகளை நன்றியோடு நினைவுகூர்ந்தார். இத்தகைய குறிப்பிடத்தக்க விழாவை நடத்திய பெருமை நடப்புச் செயற்குழுவைச் சேரும் என்றும், அது வரலாற்றில் இடம்பெறும் என்றும் கூறினார்.
தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு வி. இராஜாராமன், திரு ஜி. பாலச்சந்திரன் இ.ஆ.ப. (ஓய்வு), திரு வி. பாலசுப்ரமணியன், திருமதி இந்துபாலா ஆகியோரும், முன்னாள் செயலர்கள் திரு எஸ். இரங்கராஜன், திரு இரா. முகுந்தன், திரு சக்தி பெருமாள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர்கள் அமரர் திரு கே. வி. வெங்கடாசலம் சார்பாக டாக்டர் திருமதி இராதா வெங்கடாச்சலம், திரு எஸ் இராமாமிர்தம் சார்பாக திருமதி விமலா இராமாமிர்தம், அமரர் திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி சார்பாக திரு ஹரிஹரன், முன்னாள் செயலர்கள் திரு ஆர். எஸ். வெங்கட்ராமன் சார்பாக திரு அஸ்வின் குமார் ஆகியோர் கலந்துகொண்டதை அடுத்து அவர்கள் அனைவரும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
தொகுப்பாசிரியர் திரு இரா. இராஜ்குமார் பாலா மலரைக் கொண்டுவருவதில் தாம் சந்தித்த அனுபவங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். 40க்கும் அதிகமான படைப்புகளை வெளியிட்டுள்ள தில்லித் தமிழ்ச் சங்கம் ஒரு ஆராய்ச்சி மையமாக, கலைப் பல்கலைக் கழகமாக உருவெடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த பவள விழா மலர் 75 தலைப்புகளில் 384 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் ஆகச்சிறந்த படைப்பாளர்களின் 14 கவிதைகள், 6 சிறுகதைகள், 40க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என அற்புதமாகத் தொகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தலைவர் திரு வீ. ரெங்கநாதன் தமது தலைமை உரையில், தமிழ்ச் சங்கத்தை உருவாகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறியதுடன், பவள விழா மலர் என்பது தாய் ஒரு குழந்தையை தன் கையில் வாங்கும்போது ஏற்படும் பெருமிதமும் மகிழ்ச்சியையும் பிரதியை பெறும்போது இம்மலரை உருவாக்கிய விழாக் குழுவினர் பெறுவார்கள் என்பது உறுதி என்றார். தில்லித் தமிழ்ச் சங்கம் கடந்த 76 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை குறித்தும் பலரின் அரிய பங்களிப்பு குறித்தும் பேசினார். இந்த விழா தமது பதவிக்காலத்தில் நடப்பது தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று கூறினார். ஒத்துழைத்த அனைவருக்கும் தலைவர் என்ற முறையில் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இந்திய அயலுறவுப் பணி உயர் அதிகாரி திரு ஸ்ரீதரன் மதுசூதனன் இ.அ.ப. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அவர் தனது உரையில், தமிழ்ச் சங்கம் என்பது ஓர் ஆலமரம். தமிழ்மொழியின் சிறப்பு என்பது அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது என்றார். தமிழ்ச்சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள “பவளவிழா மலர்” மிகப்பெரிய பொக்கிஷம்: எதிர்காலத்தில் இதுபோல பற்பல விதைகளைத் தூவவேண்டும்: அதற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாதமி விருதாளருமான திரு மாலன் அவர்கள் நூலை வெளியிட்டு விழாப் பேருரை ஆற்றியபோது தமிழ்ச் சங்கத்துடனான தமது தொடர்புகளையும் தமிழ்ச் சங்கத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்தார். தில்லித் தமிழ்ச் சங்கம் என்பது குடகிலிருந்து ஊற்றாக உதித்து அகண்டு நீளும் காவிரி போன்று வளர்ந்து வருகிறது என்றார். பாரதிதாசன் அவர்கள் பாரதியைப் பற்றி குறிப்பிடும்போது “தமிழால் பாரதி தகுதி பெற்றதும், பாரதியால் தமிழ் சிறப்பு பெற்றதும்” என்பார். குழந்தைகளிடம் மொழியார்வத்தை வளர்ப்பதற்கு, சிறு வயது முதல் அவர்களுக்கு பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவேண்டும்: தானும் தனது சிறு வயதில் ‘கல்கண்டு’ இதழிலிருந்துதான் வாசிப்பைத் தொடங்கியதாகச் சொன்னார். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பவள விழா மலர் ஒரு ஆவணத் தொகுப்பு என்றும், இளைய தலைமுறையினர்க்கு திரு.வி.க, வ.உ.சி, ராஜாஜி போன்றவர்களைத் அறிமுகம் செய்வதாக இருப்பதாகவும் கூறினார். ஒரு மலரை உருவாக்குவது என்பது மிகவும் கடினம்., மலருக்கென தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்துரு, வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளி என பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் உருவாக்கியதுபோல கனகச்சிதமாக பவளவிழா மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். “விளம்பரங்களால் நிரப்பப்படாமல் விவரங்களால் நிரப்பட்ட புத்தகம் இப்பவள விழா மலர்.: விதைகளை என்றும் மறக்கக்கூடாது. நூற்றாண்டு விழாவிற்கும் நான் வருவேன். தில்லித் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கப் பாடுபட்ட விதைகளை அடுத்த தலைமுறையினர்க்கும் எடுத்துச்செல்லும் விதமாக இந்த 75வது ஆண்டு மலர் உள்ளது“. மலரை வெளியீடும் பெருவாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
மலர்க் குழுவினருக்கும், செயற்குழுவினருக்கும், படைப்புகளை வழங்கியவர்களுக்கும், மூத்த உறுப்பினர்களுக்கும், பவள விழா மலரின் பிரதிகள் மேடையில் வழங்கப்பட்டன. ஆலோசகர் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் சார்பாக யதார்த்தா தி பெரியசாமி, முன்னாள் இணைச்செயலர் ஜி.என்.டி. இளங்கோவன் சார்பாக திருமதி கௌரி இளங்கோவன், ஓவியர் சந்திரமோகன் சார்பாக திரு முத்துக்குமார் ஆகியோர் மலரின் பிரதிகளைப் பெற்றனர்.
இணைச் செயலர் திருமதி ஜோதி பெருமாள் நன்றியுரை ஆற்ற இந்த விழாவை இணைப்பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா தொகுத்து வழங்கினார்.
விழாவில் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச்செயலர் திரு ஆ. வெங்கடேசன், பொருளாளர் திரு எம். ஆர். பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் திரு P. R. தேவநாதன், திரு கே. எஸ். முரளி, திரு. ப. பரமசிவம், திரு எஸ். சுவாமிநாதன், திரு இரா. இராகேஷ், காத்திருப்பு உறுப்பினர் திரு ஜி. சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தில்லித் தமிழ்ச் சங்க பவள விழா மலருக்கு படைப்புகளை வழங்கியவர்களில் கவிஞர் மதுவந்தி எனும் திரு வீரராகவன், சிந்துக்கவி திரு மா. சேதுராமலிங்கம், முனைவர் கல்யாணி பிரபாகரன், திருமதி இரமாமணி சுந்தர், திரு கி. கணேசன், திருமதி சத்யா அசோகன், திரு ஜனக்புரி சீனிவாசன், பேராசிரியர் இரா. அறவேந்தன் மற்றும் திரு கே.ஹெச்.வி. சுப்ரமணியன், திரு நாகஜோதி, திரு ராமநாதன் உள்ளிட்ட பல மூத்த உறுப்பினர்களும், தில்லிவாழ் தமிழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.