திருவள்ளுவர் தினம் – 15.01.2022 – அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 15.01.2022 அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய இணைப்பொருளாளர் திரு இரா .இராஜ்குமார் பாலா அவர்கள் உலகப் பொதுமறையைத் தந்த வான்புகழ் அய்யன் திருவள்ளுவருக்கு இந்நாளில் மலரஞ்சலி செலுத்துவது அனைத்து தமிழர்களின் கடமை என்று கூறினார். மூத்த குடியாம் நம் தமிழ்க்குடியில் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரு வரம் என்று கூறிய அவர் “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று ” என்ற ஒரு குறளையாவது வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்றார். திருக்குறளை வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் பணியை கொரோனா காலத்திற்குப் பிறகும் தில்லித் தமிழ்ச் சங்கம் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேசிய செயற்குழு உறுப்பினர் திரு பி. ஆர்.தேவநாதன் அவர்கள் மகான் வள்ளுவரை நாம் பெற்றிருப்பது பெரும் பாக்கியம்; திருக்குறளைப் பின்பற்றி நாம் அனைவரும் அனைத்து நலன்களையும் அடைய வேண்டும் என்று கூறினார். கொரோனா தடைக்காலத்திலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு உறுப்பினர் திரு பி. பரமசிவம் அவர்கள் நன்றியைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் திருமதி டி.லதா மற்றும் சங்க ஊழியர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திரளாக கலந்து கொண்டனர்.