தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 8 நவம்பர் 2020 மாலை 4 மணிக்கு திருவள்ளுவர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. சங்க இணைப்பொருளாளர் இரா.இராஜ்குமார் பாலா அவர்களின் இணைப்புரையோடு நிகழ்ச்சி தொடங்கியது.
இவ்விழாவிற்கு அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவைப் பொதுச்செயலாளர் ஆர்.முகுந்தன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். அவர் தலைமையுரையில் பல்வேறு போராட்டங்களுக்களுக்குப் பிறகே தமிழ்நாடு மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டதெனக் கூறினார்.தமிழ்த்தாய் விருது முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களால் தில்லித் தமிழ்ச்சங்கத்திற்கென வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழ் கூறும் நல்லுலகம் நம் தமிழினம் ஆகும்.தமிழ்மொழிக்கென தனி நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அதற்கு தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும் எனவும், அதில் திரு சங்கரலிங்கனார் அவர்கள் பல நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் மற்றும் பேரறிஞர் அண்ணாவிடம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர்களை நினைவு கூறும் நாள் மட்டுமல்லாது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்த உன்னதாமான நாள் எனக் குறிப்பிட்டார்.
சங்கத் துணைத்தலைவர் பி.குருமூர்த்தி அவர்கள் விழாவிற்கு முன்னிலை வகித்தார். என்றுமுள தென்றமிழ்-கம்பராமாயணம் என இலக்கியங்களில் தமிழ்மொழியின் சிறப்பு பொதிந்துள்ளதை தனது உரையில் சுட்டிக் காட்டினார்
சங்க இணைச்செயலாளர் ஜி.என்.டி.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார்.
சங்க வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் அமைச்சர், முனைவர் வைகைச்செல்வன் காணொலியில் சிறப்புரை ஆற்றினர்.அவர் தனது உரையில் தமிழ் இனத்தினுடைய அங்கீகாரம் பல்வேறு தளங்களைக் கடந்து வந்துள்ளது.தமிழ் மொழி பாரம்பரியம் கொண்டது.அவ்வாறு நாடு சுதந்திரம் அடைந்தபின் மொழிக்கென மாநிலங்கள் பிரிக்கும்பொழுது ஒருங்கிணைந்த இந்தியாவை மொழி வாரியாகப் பிரிப்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல என நேரு,சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் எடுத்துரைத்ததாகவும், அதற்கு திரு அம்பேத்கர் அவர்கள் மொழி வாரியாகப் மாநிலம் பிரிக்கப்படும்பொழுது மட்டுமே ஒரு இன மக்களின் வளர்ச்சி வலுப்படும். இதுவே காலத்தின் கட்டாயம் என முன்மொழிந்துள்ளார். மாநிலம் பிரிக்கும்பொழுது சென்னை என்ற பெயரை தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா 1956 ஆம் ஆண்டு பெயர் சூட்டினார். அன்றைய தினமே ஒவ்வொரு நவம்பர் 01 தமிழர் தாயகம் அமைந்த தமிழர் நாளாக இன்றைய முதலமைச்சர் திரு எடப்பாடி அவர்களால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நன்னாளை நம் தில்லித் தமிழ்ச் சங்கம் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் காணோலியில் சிறப்புரை ஆற்ற அழைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரைக்குப் பின் இந்தியவாழ் வம்சாவளியைச் சேர்ந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் தமிழ்ப்பெண்ணாண அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தில்லித்தமிழ்ச் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டது.
தொடர்ந்து திரு முத்துக்குமார சுவாமி அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிடம் தில்லித் தமிழ்ச் சங்கம் மௌன அஞ்சலி செலுத்தியது.
தமிழின் சிறப்புக்களை பட்டியலிட்டும்,தமிழ்க்கவிதைகளைச் சுட்டிக் காட்டியும்,மேற்கொள் காட்டியும் பாராட்டும்படியாக இணைப்பொருளாளர் இரா.இராஜ்குமார் பாலா அவர்கள் இணைப்புரை வழங்கினார்.
சங்க இணைச்செயலாளர் ஜி.என்.டி. இளங்கோவன் அவர்கள் இந்நிகழ்ச்சியைஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் திரு.ராகேஷ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். செயற்குழு உறுப்பினர் திரு கணேசன் மற்றும் ஆ.வெங்கடெசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.