தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 20.03.2022 பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு வீ.ரெங்கநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றியதோடு, பத்ம விருதாளர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டும், வாழ்த்தியும் பேசினார்.
இணைச்செயலாளர் திருமதி ஜோதிபெருமாள் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
வாழ்த்துரை வழங்கிய தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அறவேந்தன் பேசுகையில் பத்ம விருது பெற்றவர்களான விழா நாயகர்கள் மூத்த கிளாரினெட் கலைஞர் திரு ஏ.கே.சி. நடராஜன், கவிஞர் திரு சிற்பி பாலசுப்பிரமணியம், ஷெனாய் இசைக்கலைஞர் திரு பாலேஷ் பஜாந்த்ரி மற்றும் நடனக் கலைஞர் திருமதி முத்துக்கண்ணம்மாள் இந்நால்வருக்கும் ஒரே பொருத்தம் என்னவெனில் அவர்கள் தான் இயங்க ஆரம்பித்த துறையிலேயே தேங்கிவிடாமல், மென்மேலும் அத்துறையில் உள்ள இலக்கியம், கலை நுணுக்கங்களை கற்று, ஆராய்ந்து அறிமுகப்படுத்தி, கற்பிப்பதோடு இன்றைய தலைமுறையினர்க்கு ஏற்றவாறு பழமையில் புதுமை புகுத்தி வடிவமைத்தல் என்ற கோட்பாட்டில் செயல்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
மூத்த கிளாரினெட் கலைஞர் திரு ஏ.கே.சி. நடராஜன் அவர்கள் மேல்நாட்டு வாத்தியமான கிளாரினெட் வாத்தியக் கருவியை கர்நாடக சங்கீதத்திற்கு ஏற்றவாறு துளைகளை உருவாக்கி வாசித்த மஹாமேதை ஆவார்.
கவிஞர் திரு சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் சிறப்புத் தன்மை யாதெனில் தனது எழுத்துக்களால் இலக்கியங்களில் காலத்திற்கேற்ப மரபறிந்து அம்மரபை மீறி புதியனவற்றைப் படைத்தல் என்பதாகும்.
ஷெனாய் இசைக்கலைஞர் திரு பாலேஷ் பஜாந்த்ரி அவர்கள் வட இந்திய நாதஸ்வரம் எனப்படும் ஷெனாய் இசைக்கருவியை எண்ணற்ற இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரை இசைப்பாடல்களோடு 45000 மேற்பட்ட பாடல்களுக்கு ஷெனாய் வாசித்துள்ளார் என்பது மிகப்பெரிய சாதனையாகும்.
நடனக்கலைஞர் திருமதி முத்துக் கண்ணம்மாள் கலையை கற்றதோடு நிறுத்திவிடாமல், தற்காலத்திற்கேற்ப புதுமை புகுத்தி அடுத்த தலைமுறைக்கும் சதிராட்டக் கலையை கொண்டு செல்ல முனைவது பாராட்டப்பட வேண்டியதாகும்.
இந்திய அரசு இந்நால்வரையும் தேர்வு செய்தமைக்கு நன்றி கூறி வாழ்த்துரையை நிறைவு செய்தார்.
ஏற்புரை ஆற்றிய திரு சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பேசுகையில், தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும் எனக்கும் அன்றைய சங்கத்தலைவராக இருந்த விஞ்ஞானி திரு கே.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்தே தொடர்பு உண்டு. இந்திய அரசு எனக்கு விருது அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது தமிழ்மொழி சார்ந்த இலக்கிய நூல்களுக்கும் இன்றும் வாசகர்களிடையே வரவேற்பு உள்ளது . எனது விருதை எனது வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்ட ஏனையோர்க்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார்.
ஷெனாய் இசைக்கலைஞர் திரு பாலேஷ் பஜாந்த்ரி மகன் பேசுகையில் எனது தந்தைக்கு பேசுவதைவிட இசைக் கருவி வாசிப்பதெனில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டு விழா அளிக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்தினர்க்கு தந்தை சார்பாக நன்றி தெரிவித்தார்.
நடனக்கலைஞர் திருமதி முத்துக் கண்ணம்மாள் தனது ஏற்புரையில் சதிராட்டக் கலை என்பது கோவில் விழாக்களில் பாடலுடன் ஆடுவது. இக்கலையை இந்திய அரசு கௌரவித்து விருது அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி என்றார்.
மூத்த கிளாரினெட் கலைஞர் திரு ஏ.கே.சி. நடராஜன் தனது உரையில் சிறு வயதிலிருந்தே இசையில் நாட்டம் கொண்ட நான் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள், வானொலி மற்றும் திரையிலும் இசை வாசித்துப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளேன். எனது பெயரை பத்ம விருதுக்கு தேர்ந்தேடுத்த அரசுக்கும், பாராட்டு விழா நடத்தும் தில்லித் தமிழ்ச் சங்கத்தினர்க்கும் நன்றி கூறினார்.
நிகழ்வில் அகில இந்திய வானொலி, திருச்சி நிலைய முன்னாள் இயக்குனர் டாக்டர் வாகேஷ் மற்றும் கர்நாடக சங்கீத சபாவின் பொதுச்செயலாளர் திரு ஆர்.மகாதேவன் பத்ம விருதாளர்களை வாழ்த்திப் பேசினர்.
செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் தொகுப்புரை ஆற்றினார்.
செயற்குழு உறுப்பினர் திரு ஆர்.ராகேஷ் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வில் துணைத்தலைவர் திரு பி.குருமூர்த்தி, இணைச்செயலாளர் திரு ஆ.வெங்கடேசன், இணைப்பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ்.முரளி, திரு ஆர்.கணேசன், திரு பி.பரமசிவம் ஆகியோர் பத்ம விருதாளர்களைக் கௌரவித்தனர் மற்றும் கலையார்வம் உடைய அனைவரும் கலந்து கொண்டனர்.