தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 19/09/2021 அன்று மாலை 6.30 மணி அளவில் மூத்த பத்திரிகையாளர் அமரர் ஏ.ஆர்.ராஜாமணி அவர்களின் நினைவு களுடன் “செல்லாத பணம்” என்ற படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு இமையம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தில்லித் தமிழ்ச்சங்க இணைச்செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ.ரெங்கநாதன் அவர்கள் தலைமையுரையில் ஒரு எழுத்தாளருக்கு விருதாக கருதப்படுவது, அந்நூலை வாசித்து வாசகர்கள் அளிக்கும் கருத்துக்களே மிகப்பெரிய விருதாகும் என்றார்.
நூல் அறிமுக உரையில் கவிஞர் திரு சுரேஷ் பரதன் அவர்கள் பல பக்கங்கள் கொண்ட ஓர் நாவலை ஆழ்ந்து படித்து சில மணித்துளிகளில் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் அனைவரும் இந்நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரு இமையம் அவர்கள் படைத்திருக்கிறார் என்பதை மிகவும் துல்லியமாக எடுத்துரைத்தார்.
தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு அறவேந்தன் தனது வாழ்த்துரையில் “செல்லாத பணம்” என்ற நாவலில் படித்த ஒரு பெண் நல்ல கல்வி நிலையத்தில் படித்தபோதும், சரியான முடிவெடுக்கத் தெரியாத நிலையில் வளர்க்கப்பட்டதற்கு,அவள் படித்த கல்விநிலைய பாடத்திட்டக் குறைபாடே காரணம். வாழ்க்கைக்கு அடிப்படையான வாழ்வியல் கல்வியை கொடுக்க இயலாத சமூகமும், சமூகச் சூழலும் ஒரு காரணம். என்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் திரு யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்கள் தனது வாழ்த்துரையில் திரு இமையம் அவர்களின் கோவேறு கழுதைகள் மற்றும் செல்லாத பணம் என அவருடைய ஒவ்வொரு நாவலும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளை பிரதிபலிப்பதாகக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் திரு ஸ்ரீதரன் மதசூதனன், இணைச்செயலாளர் (இந்திய அயலுறவு அமைச்சகம்) பேசுகையில் திரு இமையம் அவர்கள் 1986 ஆம் ஆண்டு சந்தித்ததாகவும், ஒரு நாளைக்கு எட்டு பக்கம் தினமும் எழுத ஆரம்பித்தவர். அவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு இமையம் அவர்கள் தனது “ஏற்புரையில் இலக்கியத்தினூடே சமூகம் ஒத்து வாழ்ந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், உரைநடை இலக்கியம் மூலம் தெரிந்து கொள்ளலாம். நான்கு வரிகளில் மொழிச் செறிவுடன் எழுதிய சங்க இலக்கியத்திற்கு ஈடு இணை கிடையாது, நம் கற்பனைக்கு எட்டாத மிகப்பெரிய பிரமாண்டம், இலக்கியம் என்பது தமிழ் சமூகத்திற்கான கல்வி, இலக்கியமும் காலமும் ஒன்றோடென்று தொடர்புடையதென்பதை சங்க இலக்கிய காலம், சங்கம் மருவிய காலம், சித்தர்கள் வாழந்த காலம் என அறிய முடிகிறது. மனித சமூகத்தின் நாகரீகம், பண்பாடு, அறிவு, வாழ்க்கையை இலக்கியப் புத்தகங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம், ஒவ்வொரு சமூகத்திலும் இலக்கியம் முக்கியப் பங்காற்றுவதற்கு அந்தந்த மொழியே துணைபுரிகிறது. எனவே, ஒரு படைப்பு என்பது தன்னலமற்று, சமூகச் சிந்தனையுடன் உருவாக்கப்படவேண்டும். ஒரு படைப்பில் எந்தக் கதாபாத்திரம் என்றென்றும் அழியாக் காவியமாக பேசப்படுகிறதோ, அதுவே ஒரு மிகச் சிறந்த படைப்பு, படைத்த எழுத்தாளர் சமூகத்தில் என்றென்றும் வாழ்கிறார். சமூகத்தில் வாழ்க்கை என்ற கடல் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். அதில் வரும் கப்பலைப்பார்த்து கரை ஏறாமல் கடலைப்பார்த்து ஏறுவதையே சமூகச் சிந்தனையாக தனது ஒவ்வொரு நாவலிலும் வெளிப்படுத்துவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்”.
சங்கத் துணைத்தலைவர் திரு குருமூர்த்தி அவர்கள் தொகுப்புரை ஆற்றினார். சங்க இணைப்பொருளாளர் திரு ராஜ்குமார் பாலா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் இணைச்செயலாளர் திரு வெங்கடேசன், பொருளாளர் திரு பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் திரு கணேசன், திரு ராகேஷ், திரு பரமசிவம், திருமதி ஜோதி ராமனாதன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பொதுச்செயலர் திரு இரா முகுந்தன் மற்றும் எழுத்தாளர் புதியவன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.