குடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாள் – 16-10-2021

16.10.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் குடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 91-வது பிறந்த நாளையொட்டி இந்திய அரசின் பிரதமரின் ஊடகப் பிரிவின் துணை இயக்குநர் திரு அருண்குமார் ஐ.ஐ.எஸ் அவர்கள் “கனவு காணுங்கள்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் உரையில் – கனவு என்பது நிகழ்காலத்தை குறிப்பதாகவும், கால வரையறை உடையதாகவும், எதிர்மறை எண்ணங்கள் இல்லாததாகவும், நல்ல எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்; அப்போது தான் அந்த கனவுவுகள் குறிக்கோள்களாகவும், நனவுகளாகவும் மாற முடியும். வெற்றிக்கான வழிகளை கனவுகளால் கட்டமைத்து ஆழ்மனத்தில் ஆழ பதியவைக்குமாறும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், ஐ.பி.எஸ், (ஓய்வு) அவர்கள் தலைமை வகித்தார். திரு பொன்னியின்செல்வன் ஐ.ஐ.எஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் வாழ்த்திப் பேசினார். கூச்சிப்பூடி குரு திரு நாகஜோதி ஆகியோர் டாக்டர் கலாம் அவர்களுடனான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, அவர்கள் வரவேற்பு உரையாற்ற, செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் நன்றியுரை ஆற்றினார். இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு பி.ஆர். தேவநாதன், திரு ஆர். கணேஷ், ரசிகப்பிரியா அமைப்பின் செயலாளர் திரு ஆர். ராமநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.