30.09.2021 வியாழக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் முதியோர் நலம் பேணி வருவதற்காக இந்திய அரசின் வயோஷ்ரேஷ்தா விருது பெறும் டாக்டர் வி.எஸ். நடராஜன் ஜீரியாட்ரிக் பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவனர் மற்றும் தலைவர், முதியோர் நல சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு பி.ஆர். தேவநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் இ.கா.ப(ஓய்வு) அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் கௌரவ இயக்குனர் NOTTO,[மத்திய சுகாதார அமைச்சகம்,இந்திய அரசு] திருமதி வசந்தி ரமேஷ் தனது உரையில் அன்றைய காலகட்டத்தில் முதியோர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நாட்கள் வசந்த காலம் எனவும், அவர்கள் நலத்தைப் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.முதியோர்கள் வெளியில் செல்லும்பொழுது தக்க பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் நலம்.கையில் தனது அடையாள அட்டை, தண்ணீர் எனக் கட்டாயம் எடுத்துச் செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.முதியோர் நலனில் டாக்டர் நடராஜன் ஆற்றி வரும் பங்கு மகத்தானது என்றும் கூறினார்.
பத்மஸ்ரீ திரு வி.எஸ்.நடராஜன் ஜெரியாட்ரிக்ஸ் பவுண்டேஷனின் முதியோர் சிறப்பு நல மருத்துவர் அவர்கள் தனது ஏற்புரையில் முதியோர் நலம் காப்பது என்பது நம் அனைவரின் கடமை. முதியோரின் நலம் காக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டதே ஜெரியாட்ரிக்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி, அதன் மூலம் 20000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளன.8000 முதியோர் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதியோர்கள் பலர் முதுமையில் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள்.மறதி, மறதி நோய், கீழே விழுதல், இரத்த அழுத்தம்,உதறுவாதம்,பெண்களுக்கான பிரச்சினைகள்,சிறுநீரக க் கோளாறு,மலச்சிக்கல்,தூக்கமின்மை, கண் பார்வை குறைபாடு,காது கேளாமை எனப் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். முதியோர் நோய், இயலாமை, அடுத்தவர்களைச் சார்ந்து வாழ்தல் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.வருமுன் காப்போம் என்பதை நினைவில் கொண்டு நோய் வராது தடுக்க, முதியோருக்கென பல விதமான மருத்துவ நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. முதுமையின் அறிகுறி தெரிந்தவுடன் ,அவருக்கு மருத்துவர் ஆலோசனையின் பேரில் முழுமையான உடல் பரிசோதனை,பரிசோதனைக்குப் பின்பற்ற வேண்டிய மருத்துவ ஆலோசனைகளோடு, உணவு, உடற்பயிற்சி, தியானம் எனப் பல்வேறு பழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அதைப்போல் சமூகத்தில் தனது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டுஒவ்வொருவரும் முதுமை என்பதைக் கண்டு அஞ்சாமல் வாழ்வோமோயானால் உறுதியுடன் எதிர்கொண்டு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழமுடியும் என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு ரங்கராஜன், முன்னாள் பொதுச் செயலாளர் திரு சக்தி பெருமாள், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள், செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடினார்கள். சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் திரு திருமதி தேன்மொழி முத்துக்குமார், திரு ஏ.வி. முனியப்பன், பி. பரமசிவம், ஆர். கணேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.