திருவருட்பா இசைமாலை – 02.10.2022

02.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வள்ளலார் அறக்கட்டளை சார்பாக அருட்செல்வர், அமரர், டாக்டர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு சிறப்பு திருவருட்பா இசைமாலை நிகழ்ச்சியை இசைமாமணி இளங்கோவன் கோவிந்தராஜன் அவர்கள் வழங்கினார். திருவருட்பா பாடல்களை உருக்கமாகவும், உணர்வு பூர்வமாகவும் திரு இளங்கோவன் பாடினார். அண்ணல் காந்தியடிகள், வள்ளலார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த இருவரின் வழியில் நடந்த பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களை நினைவுகூரும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்தது. திரு வி.எஸ்.கே. அண்ணாதுரை வயலினிலும், திரு எம்.வி. சந்திரசேகர் மிருதங்கத்திலும் அணி சேர்த்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு எஸ். நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமரர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் சேவைகளையும் எளிமையான வாழ்க்கையையும் நினைவுக் கூர்ந்தார். அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி, நால்பகதூர் சாஸ்திரி ஆகிய தலைவர்களின் பிறந்த தினம் என்றும் கர்மவீரர் காமராஜர், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரின் நினைவு தினம் என்றும் குறிப்பிட்டார். வருங்கால தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களுக்கு கோவையிலும், பொள்ளாச்சியிலும் சிலை வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் குழந்தைகள் கல்வியின் மூலம் தான் வாழ்வில் உயரமுடியும் என்பதை இந்தப் பெரியவர்களின் வாழ்க்கை உணர்த்துவதாகவும் சொன்னார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு ஆர். கணேஷ், திரு இரா. ராகேஷ் மற்றும் திரு ஏ.வி. முனியப்பன் ஆகியோர் கலைஞர்களையும், சிறப்பு விருந்தினரையும் கெளரவித்தார்கள்.

நிகழ்ச்சியை சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் தொகுத்து வழங்க, நிறைவாக
இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் நன்றி கூறினார்.