வாழ்நாள் சேவை விருது – 27.09.2023

27.09.2023 புதன்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் வழங்கப்படும் “முதியோர் மேம்பாட்டிற்கான வாழ்நாள் சேவை விருது” பெறும், டாக்டர் வி.எஸ். நடராஜன் ஜீரியாட்ரிக் பவுண்டேஷன் நிறுவனர் தலைவர் மற்றும் முதியோர் நல சிறப்பு மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் “முதுமை எனும் பூங்காற்று” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் பேசுகையில், முதுமை என்பது அனைவருக்கும் சாபம் அல்ல பூங்காற்று ஆகும். முதுமையில் தொற்று நோய்கள் மற்றும் பரம்பரை வியாதிகள் வருவதுண்டு. ஆனால் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய நோய்கள் பெருமளவு குறைந்துள்ளன. அதே நேரம் கண் பார்வை குறைவு, காது கேளாமை, மறதி நோய், சர்க்கரை வியாதி, உதறுவாதம் என பல நோய்களை முதியோர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. அவர்களின் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாமையும், உடற்பயிற்சி செய்யாததாலும் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன. முதுமையில் உடல் நலத்தை பாதுகாக்க சரியான வாழ்க்கை நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டும், மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள தியானம், தொண்டு செய்தல் மற்றும் உடற்பயிற்சியை பழக்கமாக கொள்ள வேண்டும். மற்றவரிடமிருந்து எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டு தண்ணீரிலுள்ள தாமரை இலை போல் வாழ்ந்தால் முதியோருக்கு முதுமை ஒரு பூங்காற்றே என தனது உரையை நிறைவு செய்தார்.

சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் மற்றும் இணைச் செயலாளர் டாக்டர் எம். சுந்தர்ராஜன் ஆகியோர் டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்களை கெளரவித்தார்கள்.

சங்கத்தின் இணைச் செயலாளர் திரு உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன், திருமதி உஷா வெங்கட், திரு ஜெ. சுந்தரேசன், திரு தி. பெரியசாமி ஆகியோர் உட்பட தில்லி வாழ் தமிழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.