பாரதி நினைவுச் சொற்பொழிவு – 06.03.2021

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 06.03.2021 மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் அரங்கில் பாரதியின் நினைவுச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதியை நினைவு கூறும் விதமாக செல்வி நிகிதா ராமலிங்கம் அவர்கள் பாரதியின் பாடல்களைப் பாடினார். தில்லித் தமிழ்ச் சங்க இணைச்செயலாளர் ஜி.என்.டி இளங்கோவன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தில்லித் தமிழ்ச் சங்க தலைவர் வீ.ரெங்கநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

புகழ்பெற்ற பேராசிரியர், இயல் இசை அறிஞர் திரு வேங்கட சுப்பிரமணியன் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார். இணைப்பொருளாளர் திரு இராஜ்குமார் பாலா அவர்கள் இணைப்புரை ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து பேச்சாளர் திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் “ பாரதி என்றொரு மானுடன்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அதில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திரு சின்னசாமி ஐயர் மற்றும் லெஷ்மி அம்மாள் இருவருக்கும் எட்டையபுரத்தில் சாமானியனாக பிறந்த கவி சுப்ரமண்ய பாரதி தனது 5 ஆம் வயதில் தாயை இழந்து, பல்வேறு இன்னல்களையும், வறுமையையும் கண்டு வளர்ந்தவர். பாரதியை ஆங்கிலம் கற்கும்படி அவரது தந்தை மிகவும் வற்புறுத்தினார். முதல் மனைவியை இழந்த சின்னசாமி ஐயர் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்கு விஸ்வநாதன், லெஷ்மி எனப் பெயரிடுகிறார். 10 வயதில் தந்தை அவரை ஆங்கிலப்பள்ளியில் சேர்க்கிறார். பிறகு அவரது தந்தையார் தனது சொத்து அனைத்தையும் விற்று பித்தராசபுரம் என்னும் ஊரில் பஞ்சாலை துவக்கும் நோக்கில், வெளிநாட்டு நிறுவனத்தில் எந்திரம் வாங்க முடிவு செய்து கடிதம் எழுதினார். ஆங்கிலேயர்கள் பஞ்சாலையைத் தொடங்க அனுமதி தராததால், கவலையால் நோயுற்று தனது குழந்தைகளுக்கு நல்லது செய்யவேண்டும் என 14 வயது பாரதிக்கும் 7 வயது செல்லம்மாளுக்கும் திருமணம் செய்து வைத்ததோடு, பாரதியின் தங்கை லெஷ்மிக்கும் தனது சகோதரி மகனுக்கும் அதேமேடையில் திருமணம் செய்து வைக்கிறார். பாரதி தனக்கு செய்து வைத்த சிறுவயது திருமணத்தை கூடிச்செய்த கொலை என்கிறார். அவரது தந்தை சில நாட்களில் இறைவனடி சேர்கிறார். பாரதி தனது அத்தையுடன் சில வருடங்கள் காசிக்கு சென்று விடுகிறார். மொழி தெரியாத ஊர். காசியில் ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டுமே மொழியாக இருந்தது. அவற்றை மொழியைக் கற்றுத் தேர்ந்தார். இவ்வாறு 9 மொழிகளை எழுதவும்,பேசவும், படிக்கவும் முடிந்த ஒரே கவிஞர் பாரதி ஒருவரே. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று மொழிகளைக் கற்றுணர்ந்த பிறகே எழுதினார். காசியில் 1898 முதல் 1903 வரை இடையிலான ஆறு ஆண்டுகள் அவரால் கவிதை ஏதும் எழுத இயலவில்லை. அந்த ஆறு ஆண்டுகள் தான் வாழ்ந்த வாழ்க்கையை பன்றியைப் போல் வாழ்ந்தேன் என்கிறார் பாரதி.

தனது 21 வயதில் 1903 ஆம் ஆண்டு காசியிலிருந்து சென்னைக்கு எட்டயபுர மஹாராஜாவுடன் 100 ரூ. சம்பளத்திற்கு பணியாற்ற வருகிறார். இளம் மனைவியைக் காண புத்தகங்களுடன் வண்டியில் வந்து இறங்கினார். மனைவியிடம் புத்தகங்களே அழியாச் செல்வங்கள் என்கிறார்.

முதன்முதலில் 1904 ஆம் ஆண்டு 14 வரிகள் கொண்ட “தனிமை இரக்கம்” என்ற ஓர் கவிதையை “விவேகபானு” பத்திரிகைக்காக எழுதுகிறார். பிறகு சுதேசமித்திரன் பத்திரிகையில் இரண்டாண்டு வேலை.

அப்பொழுது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வென்று, தின்று முழங்கியதை எழுதினார். அந்நியரிடம் நாம் ஏன் அடிமையாக இருக்கவேண்டும் என்பது அவரது வாதமாக இருந்தது. பத்திரிகையில் சுதந்திரமாக எழுத இயலவில்லை. 1905 இல் இந்தியா என்ற பத்திரிகையைத் துவக்கினார். முதன் முதலில் பத்திரிகையில் சித்திரங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியே ஆவார். ஆங்கிலேயர்களின் கோபத்திற்கு ஆளானார். அவரது பத்திரிகை தடை செய்யப்பட்டது. அவரை கைது செய்தனர். எனவே, 1908 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்குச் சென்றார்.பத்தாண்டு காலங்கள் பல்வேறு தேசத்திற்காக எழுத்துக்களின் மூலமும் நேரடியாகவும் போராட்டங்களை நடத்தினார். 1908-1918 ஆண்டுகளிலேயே மாபெரும் காப்பியங்களான பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்றவற்றை எழுதினார்.

இலக்கணத்தை மீறத் தயங்காதவன் பாரதி என்பதற்கு உதாரணமாக பெண் விடுதலை பற்றிய ஒரு கவிதையை 20 ஆண்டுகளாக பிஜித்தீவில் அடிபட்டு, உதைபட்டு கிடக்கும் தமிழ்ப்பெண்களைப் பற்றி கண்ணீர் மல்க எழுதுகிறார். அதாவது இலக்கணத்தில் விம்மி விம்மி என்றே எழுத வேண்டும். அதற்கு மாறாக விம்மி விம்மி விம்மி விம்மி என அவர்களின் உள்ளக் குமுறலை நான்கு முறை வரும்படி எழுதுகிறார்.

அதேபோல் ஒருமுறை புதுச்சேரியை புயல் தாக்கியது. அப்போது அனைவர்க்கும் கிடைத்த அரிசியை குருணையாக்கி கஞ்சி வைத்து அமுது படைத்தவர். அதோடு மட்டுமல்லாது புயலில் இறந்து கிடந்த காக்கைக்கும், குருவிக்கும் தனது கையால் ஈமக் கிரியைகளைச் செய்தவர்.

காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர். ஒரு முறை காந்தியை பார்க்கச் சென்ற பாரதி வாயிலில் இருந்தவர்களைக் கண்டு கொள்ளாது நேரே காந்திக்குப் பக்கத்திலேயே சமமாக அமர்ந்து தங்களால் நாளை ஒரு கூட்டத்தில் பேச வரமுடியுமா என்று கேட்கிறார் ?
அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியது போலவே வாழ்ந்தவர்.

அதிகம் பேசப்பட்ட, எழுதப்பட்ட கவிஞர்களின் பட்டியலில் வள்ளுவன், கம்பன், பாரதி இவர்களே ஆவர். பாரதி என்ற மகாகவி தனது எழுத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்தியதோடு அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். சமஸ்தானத்தின் இருந்தபொழுது ஏற்பட்ட உடலுக்கு ஒவ்வாத பழக்கங்களால் உடல் நோயுற்றார். தினமும் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவிலுக்கு செல்லும் அவர், தேங்காய் மற்றும் பழங்களை யானைக்கு கொடுப்பது வழக்கம். ஒருநாள் யானை மதம் கொண்டு இருக்கவே பாரதியை தூக்கி தும்பிக்கையால் கீழே வீசிவிட்டது.பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் நன்றாகி பழைய நிலையில் இருந்தபொழுது, திடீரென அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவ்விஷயம் உடனே வ.வே.சு. அய்யருக்கு தெரிவிக்கப்படுகிறது. சிறைக்கு கைது செய்யப்பட்டு அழைத்துச்சென்றபோது வ.வே.சு. அவர்கள் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று, பாரதியைக் கண்டு, நேரம் தவறாது மருந்துண்ணுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் பாரதியோ மருந்துண்ணாததால் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அதிகாலை 1.30 மணிக்கு காலமானார்.

தமிழர்களுக்கு பாரதி ஒருவரே தாய்நாடு, தந்தைநாடு என நம் தேசத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர். நாம் பிறந்த மண்ணை தமிழகத்தை தாய்நாடாகவும், இந்தியாவை தந்தையர் நாடாகவும் போற்றிப்பாடியவர். எனவே, பாரதி என்ற மானுடன் இன்னும் பலகோடி ஆண்டுகள் தமிழரின் நெஞ்சில் வாழும், வாழப்போகும் அற்புத மனிதர் ஆவார் என்று பாரதி கிருஷ்ணகுமார் தனது உரையை முடித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் திரு வெங்கடேசன், கணேசன், பரமசிவம் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திருமதி இராஜலெட்சுமி, கம்போடியா தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் திரு இராமேஸ்வரன், இசை ஆர்வலர் திருமதி மீனா வெங்கி மற்றும் தில்லிப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கோ.வி.இராசகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.