வ. உ . சி. – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் – பிறந்த நாள் விழா – 05-09-2021

05.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அமரர் எஸ். ராஜேந்திரன் மற்றும் அமரர் எஸ். துரை நிறுவிய வ.உ.சி நினைவு அறக்கட்டளை சார்பில் வ.உ.சியின் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் “வாழ்விக்க வந்த வ.உ.சி” என்ற தலைப்பில் சின்னத்திரைப் புகழ், நகைச்சுவை நாவலர் புலவர் மா. இராமலிங்கம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.

சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்களும் செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் அவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.

வரவேற்புரையில் தில்லித் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் என். கண்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதோடு, திரு வ.உ.சி. பிறந்த நாள் விழாவைக் கொண்டாட நாம் மிகவும் பெருமைப்பட வேண்டும். அவர் ஓர் சுதந்திரப் போராட்ட வீர்ர், கப்பலோட்டிய தமிழர், சிறந்த வழக்கறிஞர், பேச்சாளர், நூலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர். அவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு தில்லித் தமிழ்ச் சங்கம் கடமைப்பட்டுள்ளது என்றார்.

வ.உ.சி.அறக்கட்டளை நிறுவிய அமரர் திரு எஸ்.ராஜேந்திரன் மற்றும் அமரர் துரை அவர்களுக்கு தனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொண்டார். முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையும் இன்று கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தின் தன்னலம் கருதா தியாகி திரு வ.உ.சி அவர்கள் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம்.ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். மிகுந்த தைரியசாலி. சிறையில் செக்கிழுத்ததால் செக்கிழுத்த செம்மல் என அறியப்பட்டார். ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்பட்டதால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. தனது வாழ்க்கையில் வறுமையை சந்தித்தாலும் அவர் ஒரு போதும் துவண்டதில்லை.

வ.உ.சி.தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936அன்று இயற்கை எய்தினார். இன்று நாம் பிறந்த நாள் கொண்டாடினாலும் அவரவர் வாழும் காலத்திலேயே அவருக்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டியது இந்த சமுதாயத்தின் கடமை. அதை அளிப்பதற்கு முயற்சி செய்வோம்.. எனக்கூறி தில்லித்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு வீ.ரெங்கநாதன் அவர்கள் தலைமையுரையை நிறைவு செய்தார்.

கோவையில் வ.உ.சி பூங்காவில் அவரது முழு உருவச் சிலை நிறுவுவது உள்பட 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இவ்விழா வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு ஐயா வ. உ.சி. அவர்களின் புகழ் உலகெங்கும் பரவ தில்லித்தமிழ்ச் சங்கம் உறுதுணையாக நிற்கவேண்டும் என்று வாழ்த்துக் கூறி விடைபெறுகிறேன் என்று சிறப்பு விருந்தினர் திரு PY. தட்சிணாமூர்த்தி அவர்கள் தனது வாழ்த்துரையை முடித்துக் கொண்டார்.

அடுத்து வாழ்த்துரை வழங்கிய அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் செயலாளர் திரு இரா. முகுந்தன் பேசுகையில் நம்மில் பலருக்கு வ.உ.சிதம்பரனார் சுதந்திர போராட்ட வீரராகவும், கப்பலோட்டிய தமிழனாகவும், நாட்டிற்காகவே தியாகம் செய்த பெருமகனாராக தெரியும். ஆனால் அவரது இன்னொரு பக்கம், தமிழ் மீது தீரா ஆர்வம் கொண்ட தமிழ் அறிஞராகவே வாழ்ந்தார். தேசத்தை போலவே நம் தமிழ்மொழி மீது பற்று கொண்ட வ.உசி அவர்கள் தன் இலக்கிய ஆர்வத்தை பேச்சாகவும் எழுத்தாகவும் உணர்வுபூர்வமாக தமிழில் தந்துள்ளது மிகப்பெரிய மகிழ்வான உண்மை.

பிறமொழி நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தல், உரைநூல்கள், பதிப்புகள், மெய்ஞ்ஞான நூல்கள், சுயசரிதை என தன் படைப்புகளால் தனக்கென தனி இடம் தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பிடித்துள்ளார் வ.உ.சி. தன் இலக்கிய பயணத்தில் சுமார் 16 நூல்களை தந்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வ.உ.சி இளமை காலம் தொட்டே தமிழை விரும்பி கற்பவராக இருந்தார். தனது இளம் வயதிலிருந்து சுய ஒழுக்கம் சம்பந்தமான நூல்களையும், நீதி நூல்களையும் தன் முன்னோர்களிடம் கேட்டு விரும்பி கற்று வந்தார். அதுவே அவரது பிற்காலத்தில் அவரை மிகப்பெரிய தமிழ் இலக்கிய ஆளுமையாக மாற்றியது என்பது உண்மை. தொடக்கத்தில் ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவராய் திகழ்ந்த அவர், ஆன்மீகப்பேச்சுக்களையும், அதன் மூலம் தனி மனித ஒழுக்கத்தையும் தன் எழுத்துக்களில் மலர வைத்தார். ஒவ்வொரு தனி மனிதன் சரியாக நடந்து கொண்டால், அவன் இருக்கும் அந்த சமூகமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை தன் எழுத்துக்களில் காண்பித்தார்.

விவேகபாநு என்ற பத்திரிக்கையில் தான் வ.உ.சி எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் வெளிவந்தன.வ.உ.சி அவர்களின் ”கடவுள் ஒருவரே”, ”உலகமும் கடவுளும்” என்ற கட்டுரைகள் வ.உ.சியின் பெயர் சொல்லும் கட்டுரைகள். திலகர், நேரு அவர்கள் விடுதலை தாகத்தில் சிறைபட்ட சமயத்தில் எழுதிய நூல்களைப்போலவே இவரும் தான் சிறைபட்ட சமயத்தில் எழுதிய நூல் ”மெய்யறிவு”.இந்நூலின் பாக்களை சிறையிலிருந்து கைதிகளுக்கு எளிய நடையில் போதித்தார்.மேலும் தனது மனம் கவர்ந்த நூலான திருக்குறளின் நீதியை மையமாகக்கொண்டு ’மெய்யறம்’ என்ற நூலினை எழுதி மனங்களின் நலன் காத்திட உதவினார்.

ஜேம்ஸ் ஆலனின் ’அவுட் ஃப்ரம் தி ஹார்ட்’ நூலினை ”அகமே புறம்” என்று மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டார். மேலும் அந்நேரத்தில் இந்நூலுக்கு பாரதி மதிப்புரை தந்து இந்நூலின் தமிழ் மணத்தை நம் நாடெங்கும் பரவச்செய்தார்.மேலும் இவரது மொழிப்பெயர்ப்பு நூல்களான வலிமைக்கு மார்க்கம், மனம் போல் வாழ்வு, போன்றவை அந்நேரத்தில் அதிகம் பேசப்பட்ட நூல்கள் ஆகும்.

இன்னிலைக்கு விருத்தி உரை எழுதிய வ.உ.சி அவர்கள், தன் வாழ்க்கையின் கடைசி கட்டம் வரை சிவஞான போதத்திற்கான சூத்திரங்களும் உரையுமே ஆகும்.சிவஞான போதத்திற்காக நாள் ஒன்றில் இரண்டு மணி நேரம் செலவிட்டு எல்லோரும் எளிதாக நேர்த்தியாக புரியும் வகையில் உரையை எழுதி மகிழ்ந்தார். மேலும் தன் வாழ்நாளில் சுமார் 380பாடல்கள் எழுதியும் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார் வ.உ.சி. இப்பாடல்கல் கடவுள், ஒழுக்கம், அன்பு, உறவுகள்,நட்பு, முதலியவற்றை மக்களுக்கு போதிக்கும் விதமாக அமையப்பெற்றவை ஆகும்.

”தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற வரிகள் இன்று வ.உ.சி அவர்களுக்கும் பொருந்திவிட்டன என்பதே உண்மை. திருக்குறள் மணக்குடவர் உரையும், தொல்காப்பியத்தின் இளம்பூரணம் உரையையும் பதிப்பித்து மகிழ்ந்தது அவரது சீரிய தமிழ் இலக்கியத்தொண்டே. விடுதலை போராளி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்பட்ட வ.வ.சி இன்னொரு முகமான தமிழறிஞர் முகத்தையும் போற்றுவோம். அவர் தமிழ் உலகிற்கு வழங்கிய நூல்களை கற்று மகிழ்வோம். அவர் வழி நடப்போம் என்று தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

சங்கத்தின் இணைச்செயலாளர் திருமதி ஜோதிபெருமாள் அவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் அனைவருக்கும் கவிதை வாயிலாக தனது அஞ்சலியை செலுத்தினார்.

“வாழ்விக்க வந்த வ.உ.சி” என்ற தலைப்பில் அருமையாக சொற்பொழிவாற்றிய புலவர் மா. இராமலிங்கம் அவர்கள் வ.உ.சி. ஓர் மாமனிதர். நேர்மைக்கும், அறத்திற்கும் பெயர் பெற்றவர், தொழிலாளர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாதாடியவர். நிறைய கஷ்டங்களை இஷ்டங்களாகவும்,தோல்விகளை படிக்கட்டுகளாகவும் மாற்றிக்கொண்டவர். அந்த மனப்பக்குவம் நம் அனைவருக்கும் வரவேண்டும். அவரின் குரு லோக மால்ய பால கங்காதர திலக்கின் கொள்கையான சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்பதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் நெருங்கிய நண்பர்களான திரு.வ.உ.சி, மகாகவி பாரதி மற்றும் சுப்ரமண்ய சிவா மூவரும் ஆவர். என்று மடியும் சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற மகாகவிடயின் தாரக மந்திரத்தைக் கேட்டுக் கொண்டே தனது இறுதி வாழ்வை நீத்தவர். தான் உயிருடன் இருக்கும்பொழுது சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற செய்தி கேட்க முடியவில்லையே என்று மட்டும் வருந்தினார். ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை, நிறுவி திரு பாண்டித்துரை தேவர் அவர்களிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி, மும்பையில் பாலகங்காதர திலக் உதவியுடன் ஒரு கப்பலை வாங்கினார். ஆங்கிலேயர்க்கு எதிராக கடும் போட்டி நிலவியது. பல்வேறு தந்திரங்களைக் கையாண்ட ஆங்கிலேயன் சுதேசிக் கப்பல் செயல்பாட்டை நிறுத்த ஆங்கிலேயக் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாக்கி விட்டார் என்ற பொய் குற்றச்சாட்டை பதிந்து அவரைக் கைது செய்து, அவருடைய ‘பாரிஸ்டர் பட்டத்தையும் அவரிடமிருந்து பறித்தனர். அவர் சிறைச்சாலையைத் தவச்சாலையாக மாற்றிக் கொண்டு எண்ணற்ற தமிழ் நூல்களைப் படைத்துள்ளார். நாம் அனைவரும் அவரைப்போலவே சிறந்த மனோதிடத்துடனும் குறைகளைப் பேணாது நிறைகளை மட்டுமே அடையாளங் கண்டு வாழ்வை மகிழ்ச்சியானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்பதை தேசாபிமானத் தியாகியான வ.உ.சி.அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியைப் பற்றிய உரையில் எழுத்தாளர் திரு கே.பென்னேஸ்வரன் அவர்கள் இலங்கையில் “வீரகேசரி” என்னும் பத்திரிகையில் திலகரைப் பற்றி வ.உ.சி. எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வரலாற்று ஆவணமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.ஏறத்தாழ 150க்கும் மேலான எண்ணற்ற அரும் பெரும் தமிழ் நுல்களை ஆய்வு மாணவர்களுக்கென சேகரித்து தில்லித் தமிழ்ச் சங்க நூலகம் அவற்றை பராமரிப்பதன் மூலம் நாளைய தலைமுறைக்கு தமிழறிஞர் வ.உ.சி.அவர்களின் தமிழறிவை அனைவருக்கும் அளிக்க முடியும்.அதற்கு ஆவண செய்யுமாறு நிர்வாகத்திடம் தனது கோரிக்கையை உரை வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியின் முன்னாள் செயலர் திரு சக்தி பெருமாள் அவர்கள் வ.உ.சி. பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர்க்கு தனது நன்றி கலந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் திரு ஆ.வெங்கடேசன் அவர்கள் சிறப்பாக தொகுப்புரை ஆற்றினார்.

இறுதியாக செயற்குழு உறுப்பினர் திரு பரமசிவம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

சங்கத்தின் பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆர். கணேஷ், காத்திருப்பு உறுப்பினர் திரு ஜி. சங்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

தேசிய கீதம் ஒலிக்க விழா இனிதே நிறைவடைந்தது.