தில்லித் தமிழ்ச் சங்கம்- அன்னைத்தமிழின் உன்னத அடையாளம்
இந்தியத் தலைநகர் தில்லியில் தனித்துவ அடையாளமாகத் திகழும் தில்லித் தமிழ் சங்கம் 1946 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று பவள விழா காணும் அமைப்பாக வளர்ந்துள்ளது. இந்த அமைப்பின் வரலாற்றில் இடம்பெற்றவர்கள், கடந்தவர்கள், உடன் நடந்தவர்கள் என்று பார்த்தால் எண்ணற்றோர்; அனைவரும் தீந்தமிழின்பால் தீராக்காதல் கொண்டவர்கள். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்த பெருமையுடைய பெருமக்கள் மேன்மக்கள் தங்கள் மொழியோடு இணைந்து தாங்களும் தமது வருங்காலச் சந்ததியினரும் வளம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கிய அமைப்பு இன்று வளர்ந்து வாழ்ந்து பலருக்கு அங்கீகாரத்தை வழங்கிவருகிறது.
தமிழ் வாழ்ந்தால் தான் தமிழன் வாழ முடியும் என்ற தத்துவத்தை ஏற்றுப்போற்றி, தமிழ்நாடு அரசின் ’தமிழ்த்தாய்’ விருதைப் பெற்ற பேருவகையில் வீறுநடை போடும் மாபெரும் தமிழ்ச்சங்கம், இந்தத் தில்லித் தமிழ்ச்சங்கம்.
மூதறிஞர் ராஜாஜி அவர்கள், பண்டித நேரு அவர்கள், திரு வாஜ்பேயி அவர்கள், முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர், மேனாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள், முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழ்த்தாய் விருதை தமது பொற்கரங்களால் வழங்கிய தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜே. ஜெயலலிதா அவர்கள், தில்லி முன்னாள் முதலமைச்சர் திருமதி ஷீலா தீக்ஷித் அவர்கள், இப்போதைய முதலமைச்சர் திரு அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் என பல்வேறு ஆட்சியாளர்களின் காலடி பட்ட பாக்கியமும், அவர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்ற சங்கமாக தில்லித் தமிழ்ச் சங்கம் எழுந்து நிற்கிறது.
தமிழ்ச்சங்கம் பாலு என்று அழைக்கப்பட்டவரின் ஒரு சிறிய அறையில் தொடங்கி இன்று ஒரு விருட்சமாக, தமிழ்ச்சங்கம் மார்க் என்ற சாலையில், திருவள்ளுவர் அரங்கம், பாரதி அரங்கம், பாரதிதாசன் அரங்கம், தீரர் சத்திய மூர்த்தி நூலகம் என தில்லித் தமிழ்ச் சங்கம் ஒரு மகத்தான மரபின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டதால், நமது சங்கத்தின் வாயிலிலும் அவர் தங்க வண்ணத்தில் தகதகவென மிளிர்கிறார், தமிழும் ஒளிர்கிறது.
தமிழ்த்தாய் உச்சியில் பெருமையும் பூரிப்பும் பொங்கி நிற்க தமிழக அரசின் உதவியோடு அமைந்த சங்கத்தின் இந்தத் தோரணவாயில் அதன் அழகுக்கு இன்னும் ஓர் மணிமகுடம்.
இராமகிருட்டிணபுரத்தில் சொந்தக் கட்டிடமாக இந்தக் கட்டிடம் எழுந்து நிற்க பலர் இராப்பகலாக கண்விழித்து, கண்ணில் கண்டோர் காணாதோர் என அனைவரின் உதவிகளைக் கேட்டுப்பெற்று, உருவான பிரும்மாண்டம் இந்த சங்கத்தின் சிறப்பு.
இயல், இசை, நாடகம் என முத்தமிழும் முழங்கும் இடமாய், கலையும், கலையாத தாகமும் கொண்டு மரபுகளை எப்போதும் மறக்காமல், தமிழ்க் கலாச்சாரத்தின் ஓங்கு புகழ் அமைப்பாக தமிழ்ச்சங்கம் விளங்குகிறது. கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், என ஆட்டங்கள் அத்தனையும் அரங்கேறும் காட்சிகளைக் காண கண்கோடி வேண்டும். தமிழிசை, தொல்லிசை எனப் பாட்டும் பரதமும், தெருக்கூத்தும் நவீன நாடகங்களும் இங்கு காணாவிட்டால் எங்கு காண்பது என தலைநகரத் தமிழர்கள் வரமாக நினைக்கும் ஒரு சங்கம்.
பேச்சால் கவர்ந்த பேச்சாளர்கள், கவிதையாய் விதைக்கும் கவிஞர்கள், அறிஞர்கள், நடிகர்கள், நடனமணிகள், நாடகப் பிரபலங்கள், கலைஞர்கள், ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், என அனைவரும் தங்கள் சங்கமாக எண்ணி சங்கமிக்கும் ஓரிடம், தலைநகரின் தலைசிறந்த அடையாளம்.
தமிழ் மொழி கற்பிக்கும் வகுப்புகளோடு, வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், குச்சுப்புடி, வயலின், மிருதங்கம், ஓவியம், வீணை, யோகா, என வாகாய் பல பயிலரங்க வகுப்புகள் இதன் சிறப்பம்சம்.
’நூலைப்படி, சங்கத்தமிழ் நூலைப்படி’ என்பார்கள். நாளும் படிக்க நூல்களாய் நிறைந்துள்ள, தீரர் சத்தியமூர்த்தி பெயரால் அமைந்த நூலகம், பல தலைப்புகளில், பல துறைகளில், அடங்கிய ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழ் நூல்களுடன் ஒரு ஆராய்ச்சிக்கான களமாக, அறிவின் அரங்கமாக அனைவரின் தமிழ்த் தாகத்துக்கு அருமருந்தாக தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த நூலகம் பலரை ஏற்றிவிடும் ஏணியாகச் சேவையாற்றிவருகிறது. பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்தும் அளவிற்கு இந்த தில்லித் தமிழ்ச் சங்க நூலகம் ஒரு அருட்கொடையாக அறிவுப் பெட்டகமாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் தமிழ் மாணாக்கர்களுக்கு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பல வட இந்திய மாணாக்கர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பரிசுகளைப் பெறுவது மாத்தமிழின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு மகத்தான அம்சமாகும். பாரதி விழா, திருவள்ளுவர் விழா, பாவை விழா எனப்போட்டிகள் பல சீராய் அணிவகுத்து நிற்கின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையும், பெண்களுக்காக பெண்களே களம் இறங்கி நடத்தும் மகளிர் தின விழா போட்டிகளும் சங்கத்துக்கு மேலும் மெருகேற்றும் காரணிகளாகும்.
2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உணவுப் பொருட்களையும், தில்லி வாழ் ஏழைகளுக்கும் வழங்கிய கொடைத்தன்மை, தில்லித் தமிழ்ச் சங்கம் முந்தைய காலகட்டங்களில் ஏற்பட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களின்போதும் வெளிப்படுத்திய ஒன்று தான் என்பதை நல்லோர் அனைவரும் அறிவார்கள். 2020 ஆம் ஆண்டில் தமிழக துணை முதல்வரும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அனுப்பிய கபசுரக்குடிநீர்சூரணப் பொட்டலங்களை தில்லி வாழ் மக்களுக்கு வழங்கிய கடமையுணர்வும் குறிப்பிடத்தக்கது. 2021-22 ஆம் ஆண்டில் தில்லித் தமிழ்ச் சங்கம் தனது பவள விழாவைக் கொண்டாடும் மகத்தான வேளையில் இந்த அமைப்பின் நலனுக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் இடையறாது சுயநலம் பாராமல் உழைத்த அனைவரையும் நாங்கள் நெஞ்சாற நினைத்து பேருவகை எய்துகிறோம். அவர்களின் செயல்களை நாங்கள் போற்றி நிற்கிறோம். நீங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு மைல்கற்களாக உருவம் பெற்றுள்ளன. இந்த நீண்ட நெடிய வரலாற்றில் இணைந்த, இணைந்திருக்கும், இணையக் காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் நூறு கோடி. வாழ்க தமிழ்.