கவியரங்கம் – 08.10.2023

08.10.2023 அன்று மாலை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் “நீர்க்குடும்பம்” எனும் தலைப்பில் சங்கத் தலைவர் திரு சக்தி பெருமாள் முன்னிலையில், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் திரு விவேகா அவர்களின் தலைமையில் “நீர்க்குடும்பம்” எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சியின் மேயர் திரு ஆ. இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சங்கப் பொதுச் செயலாளர் திரு இரா.முகுந்தன் அவர்கள் வரவேற்புரையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த கவிஞர் திரு விவேகா அவர்கள் திரைப்படங்களில் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார் என்றார்.

சங்கத் துணைத் தலைவர் திரு இராகவன் நாயுடு அவர்கள் கவிஞர்களைக் கௌரவித்தார்.

கவியரங்கத்திற்கு தலைமையேற்றிருந்த திரு விவேகா அவர்கள் கவிஞர்களின் கவித்திறமையைப் பற்றி விளக்கிப் பேசுகையில்,

மழைத்துளி எனும் தலைப்பில் கவி பாடிய கவிஞர் முனைவர் வேல்மணி கார்த்திக் கவியில் “சூரியனைத் தொட்டு தொட்டு வானவில் வரையும் வானத்து ரவிவர்மா மழை” மற்றும் குமிழி போல் வாழ்க்கை முடிந்து போய்விடும் என்பதை கற்றுத் தரும் வான ஆசான் எனும் ஞானத்தைக் குறிப்பிடும் வரிகள், மழை வடிவம், நிறம், வாசமும் அற்றது என்பதை அழகாக கவிஞர் ஆழமான, அற்புதமான கருத்துக்களை முன்வைத்தார். திருக்குறளிலும் இதேபோன்று சாதி, சமயம் அற்ற கருத்துக்களைக் காணலாம். எனவேதான் இது “உலகப் பொதுமறை நூலாகக் கருதப்படுகிறது” என்றார்.

பனித்துளி எனும் தலைப்பில் கவி பாடிய கவிஞர் இராஜ்குமார் பாலா கவியில் “சிலர் என்னை நுனிப்புல் மேய்ந்ததாய்ச் சொல்வதுண்டு ஆனாலும் நானே நீர் மூல முதல்வன்” மற்றும் நான் இலைமேலே ஆடுவதால் நர்த்தனமிடும் நடராஜன் என பனித்துளியை வர்ணித்தது கவிஞரின் கவித்துவத்தில் நூறு கடல்களின் ஆழத்தைப் பார்ப்பதாக கூறினார்.

மைத்துளி எனும் தலைப்பில் கவி பாடிய கவிஞர் வெ.முரளிதரன் “பேனாவின் வியர்வைத்துளியே மைத்துளி” எனவும்” “எல்லா எழுத்தாளர்களுக்கும் நானே முதல் வாசகன்” “எழுதியவர்களே அடித்துவிட்ட வார்த்தைகளையும் படித்து முடித்துவிட்ட ஒரே படிப்பாளி நானே” “தேர்தல் யாகத்தில் நானே இறுதி ஆகுதி” நீங்கள் போட்ட வாக்குக்கு நான்தான் உடனிருந்து பார்த்த ஒரே சாட்சி” என்பதை பல கோணங்களில் சிந்தித்து கவிஞர் மிக நுட்பமாக கையாண்டுள்ளார் என்றார்.

இரத்தத்துளி எனும் தலைப்பில் கவி பாடிய கவிஞர் தமிழடிமை “இதயத்தோடு இருப்பவள் நானே…இவர்கள் இதயமற்றவர்கள்” எனவும் கடினமான தலைப்பாயினும் இரத்தத்துளியை பற்றி கவிஞர் நேர்த்தியாக கவிதை வடித்து வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார் என்றார்.

கண்ணீர்த்துளி எனும் தலைப்பில் கவி பாடிய கவிஞர் ஜோதி பெருமாள் அவர்களின் கவிதை வரிகள் கவியரங்க கவிதையும், நவீனக் கவிதையும் பிணைந்திருந்தது. வாடகைக்கே ஆனாலும் வாழ்ந்த வீட்டை பிரியும்போது” மாத இறுதி தினங்களை கையறு நிலையுடன் கடக்கும்போதும்” மற்றும் “ஆணிடம் காரியம் சாதிக்க எண்ணும் காரிகையின் திரவ ஆயுதம்” கண்ணீர்த்துளி எனும் வரிகள் மிக நுட்பமாக கவிஞர் உணர்ந்து எழுதியுள்ளார் என்றார்.

வியர்வைத்துளி எனும் தலைப்பில் கவி பாடிய கவிஞர் வீர வியட்நாம் கவிதைகளில் மார்க்ஸ், பெரியார் வந்தார். கார்ல் மார்க்ஸே மங்கையாக மாறி வந்து கவிபாடியது போல் நான் உணர்ந்தேன். உழைப்புதான் எல்லாம் வியர்வைதான் இவ்வுலகில் எல்லாவற்றையும் நிர்மாணிக்கிறது எனும் கார்ல் மார்க்ஸின் தத்துவம் என்பதை கவிதை வாயிலாக புதுமையான சிந்தனை மற்றும் முற்போக்குக் கருத்துக்களுடன் மிக அற்புதமாக வெளிப்படுத்தினார் என்றார்.

நிகழ்ச்சியைச் சங்கச் செயற்குழு உறுப்பினர் திரு ரங்கநாதன் தொகுத்து வழங்கினார்.

திருமதி மாலதி தமிழ்ச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.

இணைச் செயலாளர்கள் டாக்டர் சுந்தர்ராஜன், திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு அருணாச்சலம், இணைப்பொருளாளர் திரு வி.என்.டி. மணவாளன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி உஷா வெங்கடேசன், திருமதி அமுதா பாலமூர்த்தி, திரு சி. கோவிந்தராஜன், திரு தி. பெரியசாமி, திரு என். ராஜ்மோகன் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.