தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி – 14.04.2025

14.04.2025 திங்கட்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி டாக்டர் சாருலதா மணி குழுவினரின் “இசைப் பயணம்” இந்திய பாரம்பரிய இசையும், திரை இசையும் நிகழ்ச்சி மற்றும் சங்கத்தின் 80-வது ஆண்டு மலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் விருந்தினர்களையும், கலைஞர்களையும் வரவேற்று பேசினார்.

மாண்புமிகு மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் 80வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை தில்லி காவல் துறை சிறப்பு ஆணையர் திரு கண்ணன் ஜெகதீசன், இ.கா.ப அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை டாக்டர் சாருலதா மணி அவர்களும், முன்றாவது பிரதியை சிறப்பு விருந்தினர் ஆர்.கே.புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு அனில் குமார் சர்மா அவர்களும், நான்காவது பிரதியை சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா.முகுந்தன் மற்றும் பொருளாளர் திரு எஸ். அருணாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

80-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டு உரையாற்றிய மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் அவர்கள் , அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்வது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார். புத்தாண்டு என்பது இந்திய துணைக் கண்டம் முழுவதும், பல்வேறு பெயர்களில் உதாரணமாக, Baisakhi என பஞ்சாபிலும், பிஹூ என அஸ்ஸாம், விஷூ என கேரளாவிலும் கொண்டாடப்படுகிறது.

1000 ஆண்டுகளுக்கும் முன்னமே தோன்றிய, தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் மிகவும் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது.

1946 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட, தில்லித் தமிழ்ச் சங்கம் மொழியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுடன், பாரதத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளைப் பாதுகாக்கும் பணியை செய்து வருவதோடு, இன்று 80 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடிஜி நமது வளம் மிக்க கலாச்சாரத்தினை உலகெங்கும் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறார். பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டு தமிழரின் பாரம்பரியம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிஜி United Nation இல் பேசுகையில், யாதும் ஊரே! யாவரும் கேளீர்! அதாவது “வசுதைவ குடும்பகம்” என்றார்.
நாங்கள் பல நாடுகளில் திருவள்ளுவர் மையம் தொடங்குவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளோம். முதல் மையம் சிங்கப்பூரில் பாரதப் பிரதமர் சென்றபொழுது தோற்றுவிக்கப்பட்டது.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் பங்கு அளவிடற்கரியது. இந்தியாவில் வசிக்கும், புகழ்மிக்க பல தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பெற்ற கட்டுரை மற்றும் கவிதைகளால் மிளிரும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 80 –வது ஆண்டு மலரை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வாய்ப்பினை அளித்த தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர்க்கு நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.