சிறப்பு இசை நகழ்ச்சி – 27.11.2021

27.11.2021 சனிக்கிழமை மூத்த கர்நாடக இசைப் பாடகரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் பல்லாண்டு காலம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியவருமான கலைமாமணி சங்கீத ரத்னா மதுரை ஜி.எஸ். மணி அவர்களின் “கர்நாடக இசையும், திரையிசையும்” சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரு முத்துசாமி முத்து நடேசன் ஹார்மோனியமும், திரு எஸ். கணபதி தபேலாவும் வாசித்தார்கள்.
மதுரை ஜி.எஸ். மணி அவர்கள் தனது நிகழ்ச்சியின் போது தனது 14 வயது முதல் இன்று வரை 74 வருடங்களாக இசைப்பயணத்தில் பயணிப்பதாகவும், கர்நாடக சங்கீதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூக வட்டத்தினரிடையே வளர்ந்திருப்பது வருத்தத்திற்குரியது, இக்கலையை அரசு முனைந்தால் கட்டாயம் அனைவரிடமும் எடுத்துச் செல்ல முடியும்.. இசைக்கு மொழியே ஆதாரம். அன்றைய காலத்தில் சமயக்குறவர்களால் பாடப்பெற்ற தேவாரம், திருவாசகம் எல்லாம் தமிழ்மொழியில் பாடப்பெற்றதே பின்னர் கர்நாடக இசையில் பாடப்பெற்றது. கர்நாடக இசையின் ஆணிவேர் நாதஸ்வரம் ஆகும். நாதஸ்வர ஒலியைக் கேட்டே கர்நாடக இசை வித்வான்கள் அன்று பல ராகங்களில் பாடினர். இசை என்பது கோவில்களிள் சிலைக்கு செய்யப்படும் ஒருவித அலங்காரமே. அன்றைய காலத்தில் சரளிப்பூக்களைக் கொண்டே இறைவனுக்குப்பூசை செய்தனர். இசையும் சரளியும் ஒன்றே எனலாம்.எவ்வாறெனில், ஜதி (ஒற்றைப் பூ-ச ரி ..), ஜண்டை (இரட்டைப் பூ- சச ரிரி கக…) அலங்காரம் (வரிசையாக நீளுதல்- சரிகமபதநி), இறுதியாக வர்ணம் (தேவையான இடத்தில் ஏற்ற இறக்கம்- ச.. ரி..). ஒருவர் அலங்காரம் வரை கற்றுவிட்டால் அவர் முக்கால் வித்வான் என இசையைப் பற்றியும் மற்றும் அன்றைய காலகட்ட இசை ஜாம்பவான்களான எம்.எஸ். விஸ்வநாதன், மதுரை சோமசுந்தரம், கே.வி.மகாதேவன் என அனைவருடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்ததுடன், இன்றைய இசை ஜாம்பவான்கள் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் அனைவரின் திறமையையும் பாராட்டினார். பல்வேறு ராகங்களில் அமைந்த கர்நாடக இசைப்பாடலுடன் திரை இசைப்பாடல்களையும் பாடி அசத்தினார். இதில் கல்யாணி ராகம், கீரவாணி, பந்துவராளி எனப் பல பாடல்களை சிந்தனை செய் மனமே, மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, பூமாலை வாங்கி வந்தாள் என நீண்ட பட்டியல் அடங்கும்.
இந்நிகழ்வில் தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு குருமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இணைச்செயலாளர் திரு ஆ.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.
கர்நாடக சங்கீத சபாவின் பொதுச் செயலாளர் திரு ஆர். மகாதேவன், சண்முகானந்த சங்கீத சபாவின் பொதுச் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணசுவாமி,கர்நாடக இசை பாடகர் மற்றும் தில்லி அகில இந்திய வானொலியின் உதவி இயக்குனர் (கொள்கை) திரு வி. முகுந்த் சர்மா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலைஞர்களைக் கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் திரு கணேசன்,திரு தேவநாதன், திரு முனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தனர். இந்நிகழ்வில் திரு ஜி.எஸ்.மணி அவர்களின் பிரதம சிஷ்யை திருமதி உஷா பிரசாத், சண்முகானந்த சங்கீத சபாவின் இணைச்செயலாளர் திரு கணபதி மற்றும் தில்லிவாழ் இசை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.