25.12.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மூதறிஞர் ராஜாஜி இராஜகோபாலாச்சாரி அவர்களின் நினைவு நாளில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்நாடக சங்கீத சபாவின் பொதுச் செயலாளர் திரு ஆர். மகாதேவன் அவர்கள் தில்லித் தமிழ்ச் சங்கம் ராஜாஜியின் புகழ்பாடும் வகையில் இலக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அகில இந்திய வானொலியின் துணைத் தலைமை இயக்குனர் திரு கா. முருகன் அவர்கள் ராஜாஜியின் புகழையும், பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பெரிய கடமை தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு இருப்பதாக கூறினார்.
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் விவாத அரங்கங்களை ராஜாஜியை நினைவு கூறும் வகையில் நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்கள் ராஜாஜிக்கு தமிழ்ச் சங்கத்தோடு மிக நெருங்கிய தொடர்பு இருந்தாகவும், இலக்கியவாதியாகவும், நிர்வாகியாகவும் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறினார். தில்லித் தமிழ்ச் சங்கம் என்று சரியான முறையில் பெயர் அமையவும் திரு ராஜாஜி அவர்களே பெரும் காரணம் என்று குறிப்பிட்டார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் ராஜாஜி உடம்பெல்லாம் மூளையாக செயல்பட்ட ஒரு மாமனிதர் என்று புகழாரம் சூட்டினார். ராஜாஜியை ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளிலும், பிறந்த நாளிலும் நினைவு கூரும் அருஞ் செயலை தில்லித் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து செய்து வருவதாக குறிப்பிட்டார். ராஜாஜி நினைவாக நல்ல நிகழ்ச்சிகளை நடத்த கர்நாடக சங்கீத சபாவின் பொதுச் செயலாளர் திரு ஆர். மகாதேவன் அவர்களும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.