பாரதம் எங்கும் பாரதி – 27.08.2022

27.08.2022 மாலை 6.30 மணிக்கு மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவையொட்டி தில்லித் தமிழ்ச்சங்கம், பாரதீய வித்யா பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரத் மெட்ரிமோணி, ஒய்.ஏ.சி.டி.அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய “பாரதம் எங்கும் பாரதி” என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களின் சிறப்புப் பேருரை நிகழ்வு நடைபெற்றது.

“நல்லதோர் வீணை செய்தேன் என்ற பாரதியின் பாடலை செல்வி வைஷாலி பாடினார்“

நிகழ்விற்கு திரு பி.குருமூர்த்தி, தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் முன்னிலை வகித்து தலைமையுரை ஆற்றினார். தற்போதைய காலத்தில், பாரதியைப் பற்றி ஒப்பிலக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரதியைப் பற்றி மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றார்.

தில்லித் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் திரு என்.கண்ணன் சிறப்பு விருந்தினர் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக திருமதி டி.தாரா,ஐ.ஏ.எஸ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் கூடுதல் செயலர் பேசுகையில், பாரதி வாழ்ந்தது 38 வருடம் என்றாலும் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பாரதி பல பரிமாணங்களில் முழுமையாக வாழ்ந்திருக்கிறார். பாரதி தனித்துவம் மிக்கவர் என்றார்.

ஷாதரா மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையர் திரு சத்தியசுந்தரம், ஐ.பி.எஸ். பேசுகையில் பாரதி என்பவர் மாபெரும் மனிதர். கவிஞராக, எழுத்தாளராக, இதழாசிரியராக பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் தலைநகரில் உள்ள பல தமிழர்கள் அடுத்த தலைமுறைக்கு தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு ஆளுமைகள் பற்றி எடுத்துச்செல்ல வேண்டியது நமது அனைவரின் கடமை. அதை, சிறப்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் செய்து வருவது பாராட்டத்தக்கது என்றார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் சுதா சேஷய்யன் தனது பேருரையில் பாரதியார் அவர்கள் ஓர் கட்டுரையில் சிட்டுக்குருவியைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இவ்வளவு லாவகமாகப் பறக்கும் சிட்டுக்குருவிக்கு எப்போதாவது தலைவலி வந்த்துண்டா? வாய்ப்பே இல்லை. தலைநோவு வந்த முகத்தில் தெளிவு இருக்காது. மனிதனுக்குத்தான் பயமும், மானமும் உண்டு. குருவிக்குக் கிடையாது. பராசக்தியை நோக்கி அவர், நான் விடுதலை பெறுவேன்.எனது கட்டுக்கள் அறுபடும்.பிறருக்கு தீங்கேற்படாதவாறு, என் இச்சைப்படி நான் எப்போதும் நடப்பேன். நன்மைகளே நிறைவேற்றும்படியாக எனக்கு பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக உயிர் வேண்டுகிறேன்.பிற உயிருக்கும் தீங்கு வரவிடமாட்டேன்.எனது உயிருக்கும் எங்கும் தீங்கு வரமாட்டாது.பராசக்தி நின் அருளால் விடுதலை பெற்று நான் இவ்வுலகத்தில் வாழ்வேன். அவர் பாரத தேவியை பராசக்தியாகவேப் பார்த்தார்.பாரதி தனக்குள் ஒரு பிரபஞ்சத்தையே வரித்து வாழ்ந்த ஒரு குயில். விசாலமான பிரபஞ்சப் பார்வை அவருடையது. அவருக்கு கண்ணன் மற்றும் பராசக்தியை மிகவும் பிடிக்கும். சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு பாரதி செல்வது வழக்கம். அங்கிருந்துதான் சக்தியின் பல பாடல்களை எழுதினார். தன்னை சக்திதாசன் எனவும் பெயர் சூட்டிக்கொண்டார். புதுச்சேரியில் வசித்தபொழுது அவர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகளில் பணியாற்றும் பொழுது வருமானம் மிகக் குறைவு. வருமானம் குறைவாக இருந்தாலும் குடும்பத்தை மட்டும் நினைக்காது அதிகம் மக்களைப் பற்றியே எண்ணுபவர். அவரை அரசாங்கம் எதிரியாகப் பார்த்தது.பெரிதினும் பெரிது கேள் என்பவர். அவர் சிந்தனை உறக்கத்தில் இருக்கும் மக்களை எழுப்ப தனது சுதந்திர கனவை தனது பாடல் மற்றும் சிந்தனைகளின் மூலம் நினைவாக்க விரும்புகிறார். அன்றைய சூழலில் தனது சொந்த ஆசாபாசங்களை விட்டுவிட்டு, நமது தேசம் உயரவேண்டும் என்று நினைத்தார். இந்த மானுடம் மட்டுமே உயரவேண்டும். அவர் பிறந்த தேசத்தில் நாமும் பிறந்து வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை.

என்றென்றும் பாரதியை நினைவு கூர்ந்தால் மட்டும் போதாது. அவருடைய சிந்தனைகளை நடைமுறைபடுத்துவதுதான் நமது கடமை. தனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.

தில்லித்தமிழ்ச் சங்க இணைப்பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா தொகுப்புரையாற்றினார்.

தில்லித் தமிழ்ச் சங்க இணைச்செயலர் திரு ஆ.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.

ஒய்.ஏ.சி.டி அறக்கட்டளை சார்பாக சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் கருணாகரன் கலந்து கொண்டார்.

செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு ஆர்.கணேஷ், திருமதி ஜோதி ராமநாதன் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் திருமதி இந்துபாலா மற்றும் பாரதி ஆர்வலர் பலரும் கலந்து கொண்டனர்.