திரு நல்லி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழா – 28.05.2025

28.05.2025 புதன்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்மபூஷண் விருது பெற்ற திரு நல்லி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலம் சில்க்ஸ் நிறுவனர் திருமதி ஜெயஸ்ரீ ரவி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் வரவேற்புரையில் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் கொடையளித்து வாழ வைத்துக் கொண்டிருப்பவர். கடையேழு வள்ளல்களை நாம் கண்டதில்லை. இவரை எட்டாவது வள்ளல் எனலாம். இசை அமைப்புகளுக்கு உதவி செய்து வருபவர். நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். முத்தமிழ் வளர்ச்சிக்கு அயராது சேவை செய்து வருகிறார். தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜத்தின் தலைவர் திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆயிரக்கணக்கான இசை அமைப்புகளை ஒன்று சேர்த்து கொடையளித்து கலைக்கென வாரி வாரி வழங்குகிறார். திருமணம் என்றாலே இவரது ஸ்தாபன உற்பத்தி சேலைகளே முதலிடமாக விளங்குகிறது என்றார்.

சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு அவர்கள் முன்னிலை வகித்து பேசுகையில் வெள்ளை ஆடை அணிந்த வெள்ளை மனதுக்கு சொந்தக்காரர் திரு நல்லி குப்புசாமி அவர்கள் தமிழை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்றார்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தமிழாசிரியர் திரு ஜனக்புரி சீனிவாசன் அவர்கள் கவிதை வாசித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி உஷா வெங்கடேசன், திரு ஜெ. சுந்தரேசன், திரு சி. தங்கவேல், திரு பி. ரங்கநாதன், காத்திருப்பு உறுப்பினர் திருமதி ரேவதி ராஜன், ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜத்தின் தலைவர் திரு வி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் திரு நல்லி குப்புசாமி அவர்களை கெளரவித்தனர்.

திரு நல்லி குப்புசாமி அவர்கள் தனது ஏற்புரையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்துவது என்பதே மிகவும் கடினமான காரியம் ஆனால் சுதந்திரத்திற்கு முன்பே தில்லித் தமிழ்ச் சங்கம் உருவாகி இன்று எண்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. பல்வேறு இசை அமைப்புகளுடன் தனக்கு இருந்த தொடர்பையும், நடைபெற்ற நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார். தில்லித் தமிழ்ச் சங்கத்திடம் பாராட்டு பெறுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். தமிழ்ச் சங்கத்தின் பணிகள் பல்லாண்டு காலம் சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன். அத்துடன் 50 ஆண்டு காலமாக தொடர்பில் இருக்கும் ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜத்தின் தலைவர் திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆசியையும் நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். இவ்விருதினை நெசவாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களால் தான் இந்த ஸ்தாபனம் உயர்ந்த நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.

மேலும் தில்லியிலுள்ள ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜ், சண்முகானந்த சங்கீத சபா, தில்லி முத்தமிழ்ப் பேரவை, துவாரகாலயா, தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர், ஸ்ரீ ஆதிசங்கர சேவா சமாஜ், ஸ்ரீ வேதாந்த தேசிகமணி பாதுகா இந்திரபிரஸ்தா டிரஸ்ட், ஆர்.கே. புரம் செளத் இந்தியன் சொசைட்டி, ஸ்ரீ ராம் மந்திர் துவாரகா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன், தில்லி கம்பன் கழகம், ஸ்ரீ வைகுண்டநாதர் மந்திர், தமிழர் நலக் கழகம், தில்லி கலை இலக்கியப் பேரவை,ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா மந்திர் நொய்டா, தில்லி சமூகநல சரணாலயம், தென்னிந்திய முன்னேற்றக் கழகம்,ஸ்ரீ தேவி மாரியம்மன் கோவில் இ.எப்.பிளாக் இந்தர்புரி ஆகிய தமிழ் அமைப்புகளும், வயலின் கலைஞர் திரு வி.எஸ்.கே. அண்ணாதுரை மற்றும் கர்நாடக இசைப் பாடகர் திரு எம்.ஆர். ராமசாமி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு விருதாளரை கௌரவித்தார்கள்.

சங்கத்தின் பொருளாளர் திரு எஸ். அருணாசலம் அவர்கள் நன்றியுரை கூறினார்.

சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் தில்லி வாழ் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.